Monday, November 23, 2015

இது இப்படியுமா?

இன்றைய பொழுது
இயந்திரமாய் உழைத்து
இனியவள் இதயத்தை 

களவாடி விட்டேன்
இனியொரு இன்பம்
இதை விட கிடையாது

கண்கள் நான்கும்
நேர்கோட்டில் நிற்க
சந்திர கிரகணங்கள்
சில நிகழ்ந்தேறின
முத்த மலை -இலங்கை
யுத்தம் போல்
நிகழ்ந்தேறியது


அன்றலர்ந்த மலராய் அவள்
அங்கங்கள் சிவந்து நிற்க
தென்றலாய் வருடி அணைத்து
இதழ்கள் இணைத்தேன்


இன்னும் என்னை அணைத்துக்கொள்
இறுக்கம் என் உடலில் எதோ
சிற்சில அறிவியல் மாற்றத்தை
உண்டாக்குகிறது என்றாய்!


வான்மகளின் முகம்
சிவந்த வெட்கம்,
சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,
என அத்தனை
அழகையும் அழகிய
உன் உருவில்
உணரும் பொழுதில்


உன் அழைப்பில் சிணுங்கிய
என் அலைபேசி கலைத்தது
என் இன்றைய பகல் கனவினை,,,!

வலி(ரி)யின் உ(எ)ச்சம்,!

முகாரிகளினாலும் பாடமுடியாத
உறைபனியின் முகடுகளிலும் 
கரையாத எம் வலியின் 
உணர்வுகளைமுக்காடு
போட்டு மறைத்துக்கொள்ள
முயன்ற போதும் பொத்துக்
கொண்டு வெளிவருகின்றது.

சப்தமின்றி மனதுக்குள்
சத்தியங்கள் செய்திட்ட
போதிலும் நடந்து வந்த
பாதையை மறக்க -மனம்
ஏனோ தயங்குகின்றது!.

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து விட்டு போகின்றாய் நீ!
ஊமைக் குயிலடி நான்-இன்று
உள்ளுக்குள் அழுகிறேன்
உன்னால்! -உன் ஓரிரு
வார்த்தைளோ மெல்ல
மெல்ல கொல்லுதடி!

மனித மனங்களும்
மரித்து போய் விட்டது
இறைவனோ கண்ணீரைப்
பரிசாக தந்து விட்டு -இன்னும்
மௌனம் காக்கின்றான்!

எத்தனை முறை -நம்
காதலை கொடுத்த
இறைவனுக்கு நன்றி
சொல்லியிருப்போம்...?

இன்று நம்மைப் பிரித்து
நன்றிக்கடன் செலுத்தும்
இறைவனுக்கு காதலின்
வலி தெரியுமா....?

நன்றாகத் தானடி இருந்தாய் -
என்ன ஆயிற்று உனக்கு...?

நேற்று இருந்த நீ!

இன்று இல்லை...,

என்ன ஆயிற்று...?

பதில் சொல்...?

வேண்டாமடி இந்த
மெளண மொழி!

உனக்கும் காதல் வரும்
தருணம் நான் உணர்த்த கூடும்
என் மெளண மொழி......!
வலியில் துடிதுடித்தே
இறந்து விடுவாய் நீ!

வேண்டாம்!

வேண்டாம்!

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன்
பெயர் அப்போதாவது
நீ என்னைக் காதலி -அவ்வேளை
மோட்சம் பெறட்டுமென்
காதல்,,

நின் நினைவு

தூரத்தில் இருக்கின்றேன்
துயரத்தில் தான் இருக்கின்றேன்
தூக்கம் இன்றி இருக்கன்
துணையுமின்றி தான் இருக்கன்

துன்பங்கள் என்னை சூழ்ந்த வேலை
தூக்கிவிடவும் எவரும் இல்லை
துயர் பகிர வரவும் இல்லை

தூர தேசம் சென்றதாலோ
தூக்கியெறியும் உறவுகளால்
துனையென்று வந்தவளுக்கு
இணை யாரும் இல்லை என்றேன்.

உனக்கு ஈடு நான் இல்லை 

என்று இடையில் அவள் 
செல்வாள் என்றறியாமல்....!

நீ இன்றி போன நிலையில்
நிரந்தரமாய் நானும் தூங்கி விட்டால்
நீ தந்த காதல் ஒன்றே
நீடூளி வாழ்ந்திடும் என்னுள்

நினைவின் ரணங்கள்.


நட்பெனும் வட்டத்தில் -என் 
வாழ்வு நகைச்சுவையாய் 
செல்கையிலே-நன்மை 
தரும் தரு வென என் வாழ்வில்
நிழலாக வந்தவளே!

இருவரது இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லது குறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா! முடிய வேண்டும்?

நீ பற்றியஞாபகங்கள்
நொந்துபோன மனசின்
பரப்புகளில் அர்த்தமில்லாத
அவஸ்தைகளாய் கனக்கின்றன

ஒரே ஒரு கேள்வி
அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே,
நம் உறவு! எப்படி நேர்ந்தது
அது?

இந்த கிறுக்கனின்
கிறுக்கல்கள் கூட
உன் இதயத்தில்
என் பெயரை
கிறுக்கவில்லையா?

வேண்டாம் நான்
ஒன்றும் உன்னிடம் கேட்டு
உன்னை துன்புறுத்தவில்லை

மனதை தொட்டு சொல்
உனக்கு என்மேல்
ஒரு நொடியேனும்
மெய்க்காதல்
வரவில்லையா???

மயான வழி{லி}

பேச்சுகளில் உன் பெயரை
உச்சரிக்க வைத்தாய்
என் பெயர் அருகில் உன் பெயர்

எழுத ஒரு தடவையேனும் -உன்
விரல்கள் முனையவில்லையா??

நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவழைத்தாய்
ஏன்? எனக்காய் நீ
ஒரு தடவையேனும் காத்திருக்க
வில்லையா....?

சொல்லிச்செல்.....!
என்னை கிறுக்கன்
என்றுரைக்கும் -இவ்
உலகறியட்டும். உண்மை
காதல் உன்னிடம் உள்ள செய்தியை....!

நீளும்....
இரவின் அமைதி
இதுவரையிலான உன்
மெளனத்திற்கு ஒரு குரல்
கொடுக்கிறது,,,,,!

அது நான்
நினைப்பவைகளையே
இன்றுவரை பேசுகிறது.!!
ஏனோ நீ மட்டும்
இன்றுவரை பேசாமலே
இருக்கின்றாய்...?

துரத்தும் உன் நினைவுகளை
துயர் பகிரும் உறவுகளால்
துரத்தி அடித்திட்டு சில கெட்ட
நினைவுகளையும் உனக்கு
கொடுக்க விரும்புகிறேன்,

பின் ஒரு நாள்..,
என் பிணத்தின் அருகில் -நீ
அழுதுகொண்டிருக்கும் போது
அவை சில நிமிடங்கள் -உன்
அழுகையை நிறுத்தி வைக்க
கூடும் என்ற நம்பிக்கையில்!!
!

மனதில் நீயாக..!

மண்ணில் இன்பமெல்லாம்
மங்கையால் வந்ததென்று
பாவையே உன் பிரிவினிலே
பாவி நான் உணர்கின்றேன்,

பணமும் பந்தமும் இன்று
பகையாய் தோணுதே -என்
படுக்கை விரிப்புகள் கூட
இடுக்கண் கூட்டுது.,,,,,,,,,,,.!

குடலை எரிக்கும் மதுவைக்
குடித்து உடலின் வனப்பை
இழக்கவா? இல்லை
வரவுக்கு மேலே செலவுகள்
செய்து உறவுகள் எல்லாம்
துறக்கவா,,,,,,,,?

மைவிழி மாதர்
மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்து
தெருவுக்கு வந்தபின்
எப்படி இருந்த நான் இப்படி
ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில்
ஏதும் பயனில்லை என்றே!

கடல் கடந்து இருந்தாலும்-என்
கனவெல்லாம் நீயாக!
நின்மதியை துளைத்தாலும்
நினைவிலும் நீயாக,,,,
தையலே உன்னை மட்டும்
எண்ணியே வாடுகின்றேன்..........!

கொடூரக் கவிதைகள்


அதிகார அவஸ்தையில்
சில்லுக்குள்
சிக்குண்ட சில் 
வண்டுகளாய்,,,,!

பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய் -தாய்
மண் வாசனையை
தேடித் தேடி உயிர் கருகும்
பட்டாம் பூச்சிகளாய்..!

வழிந்தோடிய
இரத்த ஆறுகளை
வழி மறித்து
நின்ற
எலும்புக் கூடுகளை
நினைத்து

தேடலின்
கடைசி நுனியில்
அமர்ந்தபடி
திக்கற்றுத் தவிக்கும்
வாலிப மனங்களில்

இன்னும்
கண்ணீரில் தவிக்கும்
எல்லா மனங்களினதும்
ஏக சாட்சிகளாய்

இன்றும்
குருதியினால்
வரையப்படும்
கொடூரக் கவிதைகள்
தான் நம் தமிழ் இனம்

விதி விடும் ஆசை,

பால் மனம் மாறும் 
வயதிலும் பாசம் காட்ட 
அன்னை வேண்டும்..!

பள்ளி செல்ல
மறுக்கும் வயதில்
பார்வையிலே பயம்
காட்டும் என் பாசமிகு
தந்தை வேண்டும்

பாவையர் கண்ணில் சிக்க
பரிந்து போய் காதல் சொல்ல
பணிவான தோழி வேண்டும்

பாதை தடுமாறும் கணம்
பத்திரமாய் என்னை தேற்றும்
பண்பான தோழன் வேண்டும்

தஞ்சம் எனக்கொள்ள
நெஞ்சம் ஒன்று இன்றி
நான் தவிக்கும் கதை கேட்க
கன்னி ஒருத்தி என்
காதலியாக வேண்டும்

பாலும் பழமும்
உண்ணும் பொழுது
உயிராய் என்னை ஏந்தி
புது உயிர்க்கு உலகை
காட்டும் கனிவான
மனைவி வேண்டும்

இச்ஜெகம் என்னை
இகழ்ந்த போது கூட
துணிந்து நின்று நான்
துயர்தனில் வாழும்
வெட்கம் கெட்ட என்
வேதனை சொல்ல
வேண்டும்...!
வேண்டும்......!
என்னவள் சாயல்
பெண் குழந்தையும்..........!
என் வடிவில் ஓர்,
ஆண் குழந்தையும்.....................!.

பிரிதலின் பின் புரிதல்

தாய்மண்ணை ஏடாக்கி
சுட்டு விரலை கோலாக்கி
அன்பெனும் மையிட்டு
அகரம் பழக்கிய
அம்மா!

அதிகாலை நேரச் சூரியனை
ஞாபகப் படுத்தும் -என்
அழகிய தந்தை முகமும்...!

இசைக்கேற்று அசைந்தாடும்
மரங்கள் போன்ற -என்
தம்பி பாசம்மும்..!

சிணுங்கி விட்டுச் செல்லும்
தென்றல் போல் தங்கை
அன்பும்..!

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் குளிர்
பரப்பும் சொந்தபந்த
அரவணைப்பு
என்று...!

கூடலில் உண்டான
இன்பத்தை அனுபவித்த
நான் இன்று...!
பிரிதலினால் உண்டான
வேதனையை தாங்க முடியாமல்
நெருப்பில் விழுந்த புழுவாய்

இறைவா திருப்பிக்கொடு
தேசத்தின் களைகளை..!
கலையவந்த எம் கருவிகளை.!
நாளைய இருளுக்கு விளக்கான
எம் விடிவெள்ளிகளை...!
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....!
மலர்வதற்குள் பறித்துச்சென்ற-எம்
மனத்தோட்டத்து மல்லிகைகளை
திருப்பிக்கொடுத்துவிடு...

வேண்டுமெனில்
ஈடாக என்னையே தருகிறேன்

Thursday, November 19, 2015

அம்மா

பஞ்சத்துல பிழச்சபோதும் 
பட்டினியப் பாத்ததில்ல
பசிய நானும் கண்டதில்ல
நீ பத்துமாசம் சுமந்ததில

நெஞ்சம் எல்லாம் உன் நினவே
தஞ்சம் கொள்ள யாரும் இல்ல
பிஞ்சு மனம் ஏங்குதம்மா உன்
பஞ்சு மனம் காணாமலே!

ஐஞ்சு வயசினால நான்
அகராதி படிச்சதென்றால்
அம்மா உன் மடியென்று-இவ்
அகிலமும் அறியுமோம்மா?

தாயே நின் பெருமை -என்
சொல்லில் அடங்காதடி,
காய்ச்சல் சுட்ட பொழுதினிலே,
கண்ணீர் சொட்ட நிதம் காத்தாய்.
சான்றோனாய் எனை மாற்ற,
சாதாரணமாய் உனை மாற்றி
சாதிக்க அனுப்பி வைத்தாய்

நீ தரணியை ஆளும் நாள்..
நமக்கினித் தூரமில்ல-நீ
செஞ்ச தர்மமெல்லாம் உன்ன
வாழ வைக்கும் காலம் வரும்
.
ஆராரோ பாட்டு பாடி
அழகாய் வாழ்த்தும் பாடி
அம்மா உன் பிறந்தநாளில்
சிறு கவி நானும் தாரேன்,!
தயவாய் ஏற்று தாயே
தரணி போற்ற வாழ்ந்திடம்மா,!

ஆகாசம் வரை நான் உயர்ந்தாலும்
உன் அன்புக்கென்றும் நான்
அடிமையம்மா,,,,!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

Friday, August 7, 2015

குமுறல்கள்

விளையாட்டுப் பேச்சை
வினையாகக் கொண்டு
உருவெடுத்தது காதல்


முத்தமிழாய் வந்து
உயிரில் பதிந்தவளே!
உன்னை இசைத்தமிழாய்
கண்டேன் அசைத்து
விட்டாயடி என்னை.


பூவிதழ் தைத்து
வேலி குருதி சிந்த
"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி
விலகி நின்றாய்,
அன்று,,,,,!


தேடித்தேடி
அலைந்தேன்
தேடியது கிட்டவில்லை
கிட்டியது தேவையில்லை


தேடல் நீண்ட வேளையில்
விழி வழியே இடிமழை!
மூச்சு வழியே சூறாவளி!
இதழ் வழியே எரிமலை!
உடலெங்கும் பூகம்பம்!
காரணம் அன்று -நீ
என் முன்னே!


மூன்று முடிச்சோடு
முழு நிலா பொட்டோடு
நிறை மாத கருவோடு
கையிலொரு சிசுவோடு


அன்று என்னை -நீ
எனக்குக் காட்டினாய் -
என் பெயரிடப்பட்ட -உன்
குழந்தையை அழைத்து.


குவளையில் பூட்டபட்ட
இதயம் குமிறியலும் சத்தம்
யார் கேட்க கூடும்????

Thursday, July 16, 2015

திசை மாறும் காதல்



கொஞ்சம் விலகி நின்ற போது!
நெஞ்சம் தாங்க வில்லையே
வார்த்தை இல்லாமல்..,
வாய்ப்பும் இல்லாமல்..,
உன் வட்ட விழிக்குள்
பார்க்கவும் இயலாமல்..,
சொல்லிய காதலொன்று
சிக்கி கிடக்குது -என்
நெஞ்சு குழிக்குள்.

நியாயமற்றதாய் தோன்றினும்
நீண்டு கொண்டே போனதே
நம் நேசம் வான் வெளி போல்.
உறவுகள் இருந்தும்
என் உயிர் நீயேன
உயில் எழுதி தந்தேன்
என் உயிர் ஓவியமே??

இப்படி உன்னுடன்
பழகிய நாட்களில்..,
உன்னை வெறுக்கும்
படி ஒன்றும் இல்லையே
பிறகெப்படி உன்னை மறப்பது

பார்வைகளின் மோதல்களால்
நொறுக்கப்படும் ஞாயிறுகள்..
முள்ளில்லா கடிகாரம்......
ரத்தமின்றி நடக்கும்
ஒரு இதய
அறுவை சிகிச்சை...

நித்தம் உன்னை நினைத்து..
நெஞ்சில் ஏற்படும் ரணம்
எனக்கு பழகிவிட்டது

நீ என்னை வெளியேற்றிய போதும்.
வருத்தப்படவில்லை அன்பே.

வேறொருவனை...,
குடியேற்றிய போது தான்...,
நொந்தளுதேன் - உன் இதயம்
ஒரு வாடகை வீடு என்ரறிந்து..!

Thursday, July 2, 2015

மலடி மனம்


அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து
அடியெடுத்து நீ வச்சாலும்
ஆண்டவன் கணக்கிலும் கூட
அறியா பிழை இருக்குமம்மா

மணமுடிச்சு மாசமாச்சு
மடி இரங்க மறுத்ததிங்கே
மாயம் தான் என்னவென்று
மருத்துவரை நாடுகையில்
மலடி என்று பட்டம் சூட்டி
மறைமுகமாய் அனுப்பிவைத்தார்,

மாசம் மூன்று போச்சே என்று,,!
மாமியாரும் முறைச்சு பார்க்க
மணமுடிச்சு வந்தவன் தான்
மனசறிஞ்சு நடப்பான் என்றா,

மணிநேரம் பார்க்காம -மூன்று
மாசமாக்க நிக்குறான்!-இல்ல
மனைவி என்று ஒருத்தி தேடி
மலடி என்னை ஒதுக்குறான்,

கட்டில் கால்களுக்கும் வாய்
இருந்தா கத்தி சொல்லும் -நான்
கட்டிலில தினம் கதறும் கத,

கருப்பைக்கும் வெறும்பைக்கும்
வேறுபாடு தெரியாம அடிவயிற்றில்
ஆண்டவனும் அறியமா
அமைச்சு விட்டான்,,,,!

மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!
பலிக்காம போகையிலே
அதற்க்கு புனைப்பெயர்கள்
பல கொண்டு இப் புதுச்சமூகம்
அலைக்குதென்னை,,,,,,,,,!

பெத்தெடுத்து வளர்த்தாலும்
தத்தெடுத்து வளர்த்தாலும்
தாயவேன் நானும் என்று -தாங்கி
கொண்டேன் வலிகளையும் இன்று.!

Thursday, June 25, 2015

துளியில் என் துடிப்பு,

இணையத்தில் சந்த்தித்தோம்
இதயத்தைப் பரிமாறினோம்
நான் இங்கே நீ அங்கே,,,!


சொந்தங்களின்
கேள்வி ஆணிகளால்
அறையபட்டிருக்கிறேன்
மருந்தாய் உன்
நினைவுகள் மட்டும்.


கடந்ததையும்
கடக்கப் போவதையும்
நினைக்கின்ற பொழுது
நடந்து கொண்டிருப்பதை
தூரத்திலிருந்து நோக்கும்
ஒரு புள்ளியாய் நான்,


தனித்தோ
துணையுடனோ
அர்த்தமற்றதாய் இருந்தாலும்
அனிச்சையாய்
தொடரவே செய்கின்றன...
வாழ்க்கைப் பயணங்கள்


புல்லின் நுனியில் பனித்துளியை
சிலர் நினைக்கக் கூடும்
தென்றல் வந்து தழுவி
கொண்டு கொடுத்த முத்தத்தின்
அடையாளமாய் என்று,,,,,!
உறையாத உமிழ்நீரோ?
உழைப்பின் முடிவில்
சிந்திய வியர்வை
துளியோ என்று!


யார் உணர்வார்??
வலிக்குமென்று அறிந்தும்
வன்மமாய் கால் பதித்து ஒருத்தி
காயப்படுத்தியதால் வந்த
கண்ணீர் துளி என்று....!

உடல் இங்கு உயிர் எங்கே?

வாசுகியாய் அவளையும்
வள்ளுவனாய் என்னையும்
படைத்தவன் ஏனோ அவள்
மனதில் காதலை படைக்க
மறந்துவிட்டான்,


பேசியது கடுகாயினும்
பேச்செதுவும் வீணில்லை.
பேசாமல் அருகிருந்த
பேரின்ப நாட்களது.


தாயைக் கண்டாலும்
சலிப்பு வந்ததடீ! -உன்
வடிவில் பேயைக் கண்டாலும்
காதல் பிறக்குமடீ! -


கல் இருந்தும்,,
உளி இருந்தும்,,
சிற்பி இல்லை பெண்ணே!
கடல் இருந்தும்,,,
அலை இருந்தும்,,,,
நிலவது எங்கே கண்ணே!
உடல் இருக்கு
உயிரும் இருக்கு-உறவாட
நீ இல்லை மானே!


உயிரான உன் சுவாசம்
தனில் பயிரான என் நேசம்
இன்றோ புதிரான நிலையில்
புதிரான உன் அன்பில்
எதிரான நான் இன்று
புரியாத நிலையில்..?

Saturday, June 20, 2015

நினைவுப் பயணம்


காதலியை தினமும்
காண்பவனுக்கு நிலவு
மட்டுமே உருவகம் !
இதுவரை உன்னைக்
காணாத எனக்கு
நிலவும் ஒரு உருவகம்!

காதலி எனைத்தேடி
வருகின்ற நேரத்தில்
காய்கதிர்ச் செல்வனே!
கனலை உமிழாதே !
பாதங்கள் வெந்து
பாவையவள் துன்புறுவாள்
பட்டுடல் மேனியிலே
பாதகம் செய்யாதே !

விளக்கணைக்காமல்
சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல்
கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள்
முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டதன்று -என்
குளிர் காலக் காலையை!!!

மூக்கோடு மூக்கை
முட்டியே சிரித்திடவே
முழுமையாய்த் தடைசெய்ததன்று
அவளுடைய முக்காடு,,,!

முத்தம் கொடுக்க
நான் போனாலே!
குத்தம் சொல்லி குதித்ததும்
உட்கார வைத்து உணர்வெல்லாம்
புரிய வைத்து உரிமையாய்
நெருங்கினால் ஒரே வசனத்துடன்
ஓடியே போனதும்......

இன்றோ............!

தண்ணிருக்குள் தவறி வீழ்ந்த
மரகட்டையாக நினைவுகளோடு
தத்தலித்து கொண்டிருக்கிறேன்
காற்றடிக்கும் திசையை
நோக்கியே என் பயணம்

கரை சேர்ந்து அவள் கரம் பிடித்து
வாழ்வேனா ......????
இல்லை கரை தேடியே
வீழ்வேனா .....????
காலம் பதில் சொல்லும்

நீயில்லா நினைவில்


கனவிலும் நினையாய்
என்றரிந்தும் ஏனோ,,,!
கண்ணிமையாது,
தவிக்கின்றேன் அன்பே!

விக்கல் வரும் வேளையில்
"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் - நீ
யுத்தம் செய்த நினைவு...!

இன்று நினைத்தது
நீ இல்லை என தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ...
என ஏங்குகிறது என் மனது...!

மறக்க முடியவில்லை - நம்
முந்நாள் உறவுகளை..!
உயிர் போனாலும்
துறக்க முடியாது - எந்நாளும்
உன் பிரிவுகளை..!

தேடி வரும் போதெல்லாம் ,
நாடி நரம்புகள் அதில் ஓடும்
உதிர அரும்புகள் உறைவது
போல் சாடி சபிக்கிறாய் ! -ஏண்டி?
வாட்டி வதைக்கிறாய் ???

தாயே ! உன்தாயே சொன்னாலும்
ஒருமுறை கேள் மனசாட்சியை !
பாசம் கண் மறைப்பதால்
தெரியாது உள் சூழ்ச்சி !
வேசம் கலையும் வேளையில்
வெளிப்படும் பொய்ப் பேச்சே !

கருணைகொள் அன்பே,
இனியொரு துன்பம் சுமக்க
மனதில் வழுவில்லையடி.
கட்டியணைக்க வேண்டாம்-என்
கவிதை படித்துச்செல் போதும்

கைக்கிளை காதல்


அன்னப் பறவையைக்
கண்டாலும் கூட
அணைத்துக் கொஞ்சுகிற
ஆளில்லை நான்...
இப்போதெல்லாம் சின்னப்
பறவைகளோடும் -நிதம்
சிரித்துப் பேசுகிறேன்..!

அம்பு எய்திய மனம் -விம்மி
விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம்
கொண்ட என் ஆருயிரே,

எதை நீ தந்த போதும்..,
ஏற்று கொள்ளும் என்றும்
எந்தன் உள்ளம்..,

கைக்கிளை காதல்
எல்லாம் காமம்
இல்லை பெண்ணே...!
பெருமையல்லா உறவை
இழிவான காதல் என்று
இலக்கணமும் கூறவில்லை!

சதிராடும் இளமைக்கு
வடிகாலாய் இருக்கின்ற
காதல் உன்மனதில்
தோன்றா நிலைகண்டு
வேதனையில் துடிக்கின்றேன்;

வேரோடு வீழ்ந்திட்ட
மரம்போலத் தவிக்கின்றேன்
ஊரார் தூற்றுகிறார் -உன்
பின்னால் சுற்றுகையில்
ஆறாத புண்ணாக
ஆனதடி என்மனது!

இருள் சூழ்ந்த இரவினில்..,
என் இதயமோ தூரத்தில்..,
இமை மூடும் பொழுதினில்..,
என் கண்களோ நீரினில்

தனிமையின் சிறையில்,


சிரிக்க செய்த உன் சில்மிசங்களும்
சிந்திக்க செய்த சில கேள்விகளும்
நான் செய்த தவறுக்காய்
நீ என்னை திட்டிய நிமிடங்கள்
பிறகு என் மௌனம் கலந்த
கண்ணீரை கண்டவுடன்.-நீயே
என்னை சமாதான படுத்திய
நிமிடங்கள் அப்பொழுது என்னை
விட வேதனை பட்ட -உன்
முகமும்..மனமும்..,

பைத்தியம் பிடித்தாலும்.
பக்கத்தில் இருப்பேன்
பிரியவே மாட்டேன்.,எனும்
பிரியமான வார்த்தைகள்,
அனைத்துமின்று,,,!

முகிலாய் தோன்றி,
மேகமாய் படர்ந்து இறுதியில்
மழையாய் மண்ணோடு
மறைந்து போகும் என்று
யாரும் நினைக்கல்லையே!

அணுவணுவாய் ரசித்து
வாழ்ந்தேன் உன்னை -இன்று
அணுவளவும் நினையாமல்
வாழ்கின்றாய் நீ என்னை,

அக்காவிடம் சொல்லி வைத்தேன்
அந்தபுரத்தில் அவள் அல்லிப்பூ
அர்த்தசாமத்தில் மல்லிப்பூ-என்று
அத்தனையும் கானலாய்
மாற்றிடாதே பெண்ணே!

என் காதல்..,நான்
வார்த்தையாய் சொல்லித்தான்
உன்னை வந்தடைய
வேண்டும் என்றால்..,
அது என்னிடமே இருக்கட்டும்

ஆயிரம் அர்த்தம் சொல்லும்
உன் அழகிய விழிக்கு சொல்லு
அடங்கா வலியுடன் இவ் ஆண்மை
மெளணித்து இருகிறதென்று

அடிக்கும் தாயையே
அணைக்க ஓடும் குழந்தை போல
வெறுக்கும் உன்னையே
தேடி தினம் மனம் ஓடுது.

பாதை இது தான்..,
பயணமும் இது தான்..,
பதில் மட்டும் நீ சொல்..,
நான் - உன் வழிதுணையா?
இல்லை வாழ்க்கை துணையா?

Thursday, June 11, 2015

முற்களும் பூக்களும்,!

அழகை படர விட்டு
ஆயுதமாய் காவல்
காக்கும் காத்திரமான
படைப்பே முற்கள்,


நல்லவர் கெட்டவர் பாராது..
இன்மை வறுமை அறியாது
முற்களின் சொத்தை
அபகரிக்க சென்றுவிட்டால்
அவதிபட்டே திரும்பிடுவீர்


சட்டம் நீதி எல்லாமே அதற்க்கு
ஆண்டவன் வகுத்தது மட்டுமே
ஆடவர் சென்று கேட்டாலும்
அது சட்டம் மீறி செல்லாது


லஞ்ச ஊழல் இங்கில்லை
யார்க்கும் அஞ்சும் எண்ணமில்லை
வண்ணம் கொண்ட பூவெல்லாம்
இதன் கூர்மை பார்த்தால்
குளிர்ந்திடுமே,,,!


இரவும் பகலும் போலே,
இன்மை வறுமை போலே
நல்லது கெட்டது போலே.
ஆண்டவன் படைப்பில்
இன்னும் மாண்டு போகாமல்
முற்களும் பூக்களும்,!

Thursday, May 28, 2015

நீ வரமா? சாபமா?

முத்து பல்லழகி
முந்திரியம் மூக்கழகி
மூன்றாம் பிறையழகி
தித்திக்கும் பெயரழகி
செந்தமிழ் சொல்லழகி
 சிந்தை செருகி நின்றேன்
சிங்காரி உன் இடையழகில்-இதில்
விந்தை என்னவெனில் நான் 
வீழ்ந்தது உன் அழகில்
 நின் நெற்றிபொட்டின்
அளவு கூட இடம் தர
மறுத்தாயடி இதயத்தில், 
அப்படி என்ன பாவம்
செய்தேன் உன்னை
காதலித்ததை விட.?
தொலைபேசி தொல்லையாக
உன் தொலைவே அதற்க்கு 
எல்லையாகியது
நிதமும் வேண்டுகிறேன்
நின்மதியை தேடுகின்றேன்
நீ வந்து சென்றதாளோ
நினைவிழந்து நிற்கின்றேன்-தினம்
நீளும் இரவினிலே நீ
இல்லா தனிமையிலே
நிலவும் நானும் இன்று
இழவு காத்த கிளி போலே 
இரவில் காத்து கிடக்கின்றோம்
சிலந்தி வலைக்குள்
சிக்கிய ஈ போல், -நான்
சிக்கி தவிக்கிறேன் 
வாழவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்......!

Friday, May 22, 2015

தேவையவள்

நித்தம் உந்தன் நினைவு-என்னை
சத்தம் இன்றிக் கொள்ளுதடி
யுத்தம் இன்றி காதல் கொள்ள
கத்துகொடு என் பவளக்கொடி


பல வருடம் தவமிருந்து
பாவையுனில் காதல் கொண்டேன்
பாசமுகம் கொண்டு நீ தான்
பறந்தோடி வருவாயோ?


நேசம் வைத்த உறவெல்லாம்
நெடுநாளாய் நிலைக்கல்லடி-நெஞ்சம்
எல்லாம் உன்னை வைத்தே
நிலைகுலைந்து போனேனடி


நேரம் வரும் காத்திரென்று
தேவதையே நீயும் சொன்னால்
தெய்வம் வந்து சொன்னாலும்
தேவை நீ மட்டுமே என்று
தேவாரம் பாடி நிற்பேன்,-என்
தேவதையே நீ சொல்லி விடு,,,
!

Wednesday, May 6, 2015

தாங்குமா நெஞ்சம்.

கண்ணிமைக்கும் நொடியில்
கரைகடந்து செல்வேன், -நின்
வன் செயல் கண்டு இன்று
நிலை மறந்து போனேன்,

வதைக்கும் எண்ணம்
வேண்டாம் , தாங்காது
என் மனது தேங்கிய
நினைவு பல தூங்கினாலும்
தூங்குவதில்லை அவை

பத்தோடு பதினொன்றாய்
பாவையுனை பார்த்திருந்தால்
பாவாடை தாவணிபல
என் பள்ளியறையில்
கண்டிருப்பேண்டி!

சீதையாய் நீ இருப்பாய்
ராமனாய் நான் இருக்கவே
இரவுபகல் தவமிருக்கேன்!
பிஞ்சு நெஞ்சமடியிது-விச
நஞ்சை தூவாதே புள்ள நீ

துரோகம் எனும் துயர் தாங்க
துளியளவும் துணிவில்லை,
தூயவளாய் நீ இருந்து விடு
துன்பத்தில் எனை தள்ளிடாதே!

ஏமாற்றமும் தடுமாற்றமும்
எல்லோருக்கும் புதிதல்ல
ஏற்றிடும் எண்ணமும்
நோக்கிடும் பார்வையுமே
நாளைய வாழ்வின் படிகளடி

கன்னியாய் நீ இல்லையெனிலும்
கணவனாய் நான் இருப்பேனடி
கல் நெஞ்சக்காரி நீயும்-
என்னை
கலங்கடித்து விடாதே பெண்ணே,,,!

Sunday, May 3, 2015

ஒரு தாய் புலம்பல்

பத்து வயதில்,
பருவம் அடைந்த கிளி
பாசம் வேஷம்,
அறியாமல் சென்றதெங்கே?


பிச்சை புகினும்
கற்கை நன்றென்று
மாடாய் உழைத்து
மல்லிகையும் விற்று
பல்கழையில் படித்தவள்


காம வலைவிரித்த -அக்
காடயன் கையில் சிக்கி
சீரழிவாய் என்று கனவிலும்
நினைக்கல்லையே! தாயி


அப்பன் இல்லா திமிரா?
அண்ணன் இல்லா உணர்வா?
காலத்தின் கட்டாயமா?
வயதின் வளர்ச்சியா?
வரம்பு மீறிய உணர்ச்சியா?


என்னவென்று சொல்லியழ
தாய்மடி மறந்திவளும்
மன்மத மடிதேடி சென்று
பஞ்சனையில் என் புள்ள
பாழான கதையை!


கண்பார்த்து காதல் கொண்டு
கைபிடித்து வாழ்ந்திருந்தால்
வாழ்த்துரைத்து சென்றிருப்பேனே!


தொடையிடையில் காமம் கொண்டு
கயவனோடு கட்டில் சென்று-இன்று
கண்ணீரில் தவள்கின்றாளே!
என் சொல்லி தேற்றிடுவேன்
என் தவப்புதள்வியை,,,,,,,,,,,,!

Saturday, May 2, 2015

பணம்தானோடி நின் காதல்!

புத்தக இடுக்கில் புகைப்படம்
மறைத்து வைத்து ரசித்த
காதலர்களோடு அழிந்து
போனது உண்மைக் காதல்!


தாய்மையின் தாற்பரியம்
தங்ககத்திற்கு ஈடாகுமோடி?
காதலன் கண்ணசைவுகளை
காமம் என்று உணரலாமோடி?


எங்கிருந்து வந்தாயடி
என்னவளே நீயும்? -இன்று
எடுத்தெறிந்து போறேண்டி..
உன் எளிய குணத்தால் நானும்.

பணத்தை காட்டி கல்யாணம்
கட்டுவதில் என்னடி பயன்???
சி.. சி..பிணத்தை கட்டுவதற்கு
ஒப்பாகுமே அவ் நொடிகள்


வெளிச்சத்தை கடன்
வாங்கிய நிலவு...! இரவுக்காக
காத்திருப்பதில்லை என்பதை
உணர வைத்தாயடி பெண்ணே ...!
வெளிநாட்டு மாப்பிள்ளையின்
மணிகிரேம் பார்த்தவுடன்,,,!


நான் நானாய் இருக்கும்
வரையிலும் நீ செய்பவை
எல்லாம் சரியே!
எப்பொழுதும் ஏற்படும் ஐயம்
நான் நானாய் இல்லையெனும்
போது என்ன
நடக்கும் என்பதே ??????

தொழிலாளர் தினம்{01-05-2015}

அம்மா பசிக்குதென்று
பத்து தெரு தட்தேந்தாமல்
பிறர் குப்பைதெரு கூட்டி
உண்ணும் தொழிலாளியே!


உன் குழந்தைப்பருவ
நினைவும் சொல்லுமோ
அப்பன் செய்யும் தொழில்
தெய்வம் என்றதையே!!!!


பிச்சு தின்னும் மனிதனை விட
பிறருக்கு வித்தை காட்டி
உண்ணும் குரங்காயிருந்திடு
எல்லாம் முன் கைவந்திடும்


இங்கே பிணத்தை கூட
பணமாய் மாற்றும் மனிதம்
அதிலே நீ மரித்தும் இனிமேல்
இல்லையடா ஒரு புனிதம்


தொழிலாளி தொலைவாகி
நடுத்தெருவாகி நில்லாமல்
நாளை என்றும் நமதாகி வாழ
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்,

முறிந்தது முழுதும்

கண்மூடி முகம் புதைத்தேன்
கனவிலே உன் முகம்,
காலை கண்விழிக்கையில்
கணனியிளும் உன் முகம்,


எங்கே போவேன் -என்னவள்
நினைவில்லா தேசம் தேடி?
உன்னழகே புன்னகை என்றாய்
பறிபோனது புன்னகையும்,
பரவசமாய் பார்க்கின்றாய் என்றாய்,
பாழானது பார்வையும்,


தேவையற்ற வாதங்களும்
மூட நம்பிக்கைகளும்
முட்டாளாக்கியதே முழுமதி
நம் காதலை,


பிடிக்காதா செயலுக்காய்
போடும் சண்டைகள்,
பிடித்தவருடன் மட்டுமே
முடியும் என்று புரியல்லையே
புள்ள ஏன் இன்னும் உனக்கு,,,,!


பிடிக்கும் சண்டை எல்லாம்
பிரிவுக்கு மட்டுமென்றால்
உலகம் உருளுவதில்
உள்ளதோடி பயன் ஏதும்,,,,,,,,,?


உணர்ந்துகொள் உண்மையை
உயிர் பிரிந்த பின் உடலிருந்து
பயன் ஏதும் இல்லை,

Tuesday, April 21, 2015

ஆசையில் அவசரம்.


தடையேதும் வந்திடினும்
திசைமாறி போவோம் என்று
திருட்டு முழி பார்வைகளோடு
இருப்பதேனடா????


தத்தி தவழ்கையில் நீயும்
தாயிடம் பிச்சு தின்றதை
மறக்கலாமோ மானிடா?


தங்கதொட்டிலில் அன்றும்
தாவணிக் கட்டிலில் இன்றும்
தடுமாறும் உள்ளங்கள் பல


தடம்மாறி போனவர்களும்-வரை
படம் கொண்டு கடப்பதுண்டு
வையக வாழ்வினை!


படமே இல்லை உன்னிடம்-பின்
பாய நினைப்பது ஏனடா?
மூன்று முடிச்சிட நீயும்
முந்துவது ஏனடா? -முட்டாள்
ஆசையை அடக்கிகொள்
அவனியில் உண்டு ஆயிரம் ஆயிரம்.


அன்னையின் அன்பிலே
அப்பாவின் பண்பிலே
அக்காளில் அரவணைப்பிலே
அண்ணனின் அடக்கத்திலே
தம்பி,தங்கையின் தயவிலே


அனைத்தும் கண்டுகொள்
ஆண்டவன் அளித்திடுவான்
அளவான அழகான
ஆறடிப்பெண் சிலையை..!

Wednesday, April 15, 2015

உயிரில் உரசிய தீ

வெள்ளந்தி சிரிப்பினிலே
வேதம் கற்பித்தவளே.!
தீட்டு நெருங்காமலும்
திகழொளி சுருங்காமலும்
திங்கலேயுன் முகம் தேடி
தினம் தோறும் அலையுறேன்டி


ஏற்ற சோகங்களும்
ஏற்காத கோபங்களும்
தேற்றாத நம் உறவில்
பெருமாள் உண்டியலில்
பெற்று கொண்ட சன்மாமனாய்
கொட்டிய வார்த்தைகள் இங்கே
சிந்திய வேர்வை போலே
கோர்வையாய் கிடக்குதடி


மெளனத்தின் விலைவாசி
மயானத்தில் இல்லையடி
மந்திரித்த சேவல்களும்
பரபரப்பில் பதுங்குதடி


படிக்கும் கவிதையெல்லாம்
பனைமர கள்ளு போலே- நம்
பழைய நினைவுகளை
பளிச்சென்று தீண்டுதடி


கோபம் வந்ததென்று-வீண்
பாவம் செய்யாதே பெண்ணே
இக்கோப அலைகள் என்றும்
கோதையர்க்கு ஆகாதடி பெண்ணே


விசுவாச காதலுக்கு -எங்கும்
விளம்பரம் இல்லையடி
விலையற்ற என் அன்புக்கு
விதியே விடை சொல்லும்.

Monday, April 13, 2015

மன்மத புத்தாண்டு

ன்மத புத்தாண்டு
மகிழ்வுடனே மலர்ந்திட,

புன்னகை முகத்தோடு
புதுமைகள் செய்திட,

புதுமைப் பொலிவுடன்
புத்தெhளி வீசிட

இன்னல்கள் நீங்கி
இன்பங்கள் பொங்கிட,

தமிழர் எம் வாழ்வில்
தடைகள் எங்கும் நீங்கிட

புலரும் புதுவருடத்தை
புத்தாடை போர்த்தி
புகழ்பாடி வரவேற்போம்

* என் இனிய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும்*
*...மன்மத தமிழ் புதுவருட நல் வாழ்த்துகள்....*

சாதிக்கு சவுக்கடி

அரும்பு மலரும்
அதிகாலை வேளையிலே
ஈடற்ற ஓவியமாய்
கீழ்வானம் ஒளிர்ந்திடும் பொழுது


சாதி நிர்ணயிக்கும்
சாமானியர்களுக்கு சட்டென்று
சவுக்கடி கொடுத்து அடக்கும்
சரித்திர பார்வையில்-என்
இனத்தவனின் விவசாயம்


ஆட்டெரு மாட்டெரு என
அனைத்தும் அடியாய் இட்டு
இயந்திரம் கொண்டும் அடி
மாடு கொண்டும் அழகாய் உளுது


வெய்யிற் காலம் நோன்பிருந்து
வெருந்தரையில் சுருண்டு கிடந்ததும்
மணல் மண் பாத்தி கட்டி
மங்கையர் விரல் பிடித்து
மண்ணில் விதை ஊன்றி


ஓரிரு மாதம் போக
ஓங்கி வளர்ந்த தாளிலே
இலைபூச்சிகள் உயிர் வாழ
டெமட்டான்,பாஸ்போமிடான்
கொண்டு பாரிடை நோய்களை நீக்கி


மழை காற்று பாராமல்
பணிவிலும் இரவிலும்
படங்கில் கிடந்தது கொண்டு
பிடுங்கிய பயிரை வாங்கிய
சனல் கயிறு கொண்டு
சோடி முடிச்சு போட்டு
சோதனை வெள்ள கட்டும்
கட்டுகளையார் மறந்தீர்.


வீட்டுக்கு வந்தாச்சு பயிர்
விரல் சூப்பும் குழந்தை முதல்
கால் தடக்கும் கன்னியர் வரை
தகர கத்தி கொண்டு வெங்காயம்
தவழ்ந்து புரண்டு வெட்டிய கதை
வேதனையில் முடியுதின்று


வயித்துப் பொழப்புக்கு,
வெவசாயம்,வெங்காய
மூட்ட நாலஞ்சி,
ஊரெல்லாம் சுத்தி வரும்
மாடியில கோடியில,
இல்லாத சந்தோஷம்,
மாடு மேய்க்கும் வேலைல
வெங்காய விலையேற்றதில்
நிறைஞ்சிருக்கும்,,,!

Monday, April 6, 2015

அழைத்திடு அம்மா!

அயல் நாட்டில் நான் அம்மா
அடிவயிறு கனக்கிறது அம்மா
அந்து சந்து பொந்து எல்லாம்
அழகிய உன் நினைவுகளேயம்மா,


அலைப்பாய் அலைபேசியிலென்று
என் ஆழ்மனம் சொல்கிறதம்மா
அழைக்கவில்லை நெடுநாளாய் என்று
என் அலைபேசியும் அழுகுறதம்மா


அன்புக்கே ஏங்கினேன் அம்மா -என்னை
அடிமையாய் நினைக்காதேயம்மா
பத்துமாதம் பகலிரவாய் நான்
பசியிருந்து பெற்றமகன் என்று!
பட்டையம் போட்டு பத்திரம் கொடுத்தாயே!


இன்று பாசம் எனும் பசி வாட்ட
பரிதவிக்கிறேன் உன் பாவிமகன்
அடுக்கடுக்காய் மிஸ்ட் காலும்
அடிக்கடி கொடுத்தேனே,
அழைக்கவும் தோனல்லையோ!
அன்பு மகன் படும் அவதியில் உன்
அடிவயிறும் எரியல்லையோ?


வரி வரியாய் கவி வடித்தும் -என்
வலி தீர்க்க முடியல்லம்மா
வசதியாய் நாம் வாழ
வழி ஒன்று பிறக்குமம்மா
விதி ஒன்று உண்டெனில்-நான்
விண்ணையும் எட்டுவேன் அம்மா

விளம்பரம் வேண்டாம் அம்மா
வினை தீர்க்க வருவேன் அம்மா,


அன்பாய் மூன்று வார்த்தை
அழகாய் அழைத்துவிடு என்
அடிமன சோகம் எல்லாம்
அடியோடு போய் விடும்-அதிசயம் 

நிகழும் எனில் அதுஉன்
அழைப்பிலே ஆகட்டும் அம்மா!!!!!

Thursday, April 2, 2015

இம்சை

தினம் காலை விழிக்கையில்
காதோரம் ஒரு முத்தம்!
கணினி கைகொண்டு 'கார்'
எடுக்கச் செல்லுகையில்
கன்னத்தில் மறு முத்தம்!

கடமை முடிந்து களைப்படைந்து
வீடுவர வாவா உனக்காகத்தான்
காத்திருக்கிறேன் என்று
கண்களால் கனிமுத்தம்!
காதல் வயப்பட்டு காரிகையின்
கண்பார்க்க கார்மேகம்
பொழிவது போல் கட்டி முத்தம்
கணக்கின்றி!

வெறும் கனவுதான்...!-ஆனாலும்
இதமாக இருக்கிறது
எண்ணிப்பார்க்க!
என்னவளே எங்கே நீ,!??

Sunday, March 29, 2015

மோதலா காதலே!

காத்திருந்த காலமெல்லாம்
விழி பூத்திருந்ததடி
உன்னையெண்ணி,,!
நீலவானம் நிறம் மாறியது
நீ இல்லை என்பதனால்
காணவில்லை உன்னையென்று
கருமேகமும் கலைந்தது சென்றது,


வீசும் தென்றலும்,
கொட்டும் மழையும்,
சுட்டிடும் வெய்யிலும்
சாட்சி வைத்து
காதல் செய்தோமே,
கதிரவனை கண்ட
கருமுகில் போலே
கானலாய் நீயும்
மறைந்திடவே?
சாதியார் செய்ததடி-நம்
சரித்திர காதலுக்கு,


இவ் வாழ்வும் இல் வாழ்வும்
இனிதாய் இருக்குமென்று
இரவுபகல் கனா கண்டேன்
இரண்டும் இல்லையடா
இனியுன் வாழ்விலென்று
இனியவளே செல்வதேனோ?
இளையவளே சென்றதேனோ?

Sunday, March 22, 2015

நடுவோம் நல்ல மரம்

வீட்டுக்கொரு வீரன் சென்றான்
விடுதலை வென்று வர,-அவன்
வீரச்சாவில் விட்டுசென்றான்
அவனுருவில் ஆலமரம்,


உறவுகோர் உருவகமாய்-
நாளை நம் நினைவு கூற
நாமும் நடுவோம் நல்ல மரம்,


ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து
எரி குளம் அருகில் நட்டு
நாட்டு வலம் காத்திடவும்
நாளைய தலைமுறை சிலிர்த்திடவும்
நாமும் ஒரு மரம் நடுவோம்


ஆடு மாடு உணவுக்கே
அழகாய் ஒரு மரம் நடுவோம்
அன்பு கொண்ட உள்ளமெல்லாம்
ஆடி பாடி மகிழ்ந்திடவே
ஆளுக்கொரு மரம் நடுவோம்


வறண்டு போகும் வையகத்தின்
வளர்ச்சிக்கு மரம் நடுவோம்
இல்லம் தேடி வந்தோரெல்லாம்
இளைப்பாறி இன்புறவே
இன்றே ஓர் மரம் நடுவோம்


சாலையோர மரம் சமதூரம் நட்டு
பிச்சைக்கு தட்டேந்தி பிழைப்பு
நடத்துவோர்கெல்லாம்-பச்சை
மர நிழலின் பசுமை உணரசெய்ய
பார்த்து பார்த்து மரம் நடுவோம்


கள்ளக்காதல் நல்ல காதல்
காமக்காதல் கண்ணியகாதல்
கொண்டோரெல்லாம் கொண்டாடவே
கோடைநிழல் கொட்டித்தரவே
கோடி மரம் நாம் நடுவோம்,


சூரியகுதிரைகள் எங்கள் சூழலில்
நுழையா வண்ணம்-நம் சுழலும்
தலைமுறை சுற்றி நின்று நினவு கூற
சுருக்காய் செயல்படுவோம்

Friday, March 20, 2015

வய(து)லும்

கட்டு சோறு
கட்டி கொண்டு
முற்றிய கதிர்களை

முறித்து போட்டு

வாய்கால் வரம்பு வழி
வந்த பட்டாம் பூச்சி
விட்டு விரட்டி சேற்றில்
விழுந்து ஆற்றில்
குளிக்க சென்றதும்,,,,,,!


பட்ட வெயில்
தொட்டு செல்லும்
வயல்க்காற்றின்
வரப்பில் - மெல்ல
நடை போடும் நினைவும்
கனவில் காண்கையில்
மேனி சிலிர்க்குதே,!


வாய்கால் வழியே
வளிந்தோடும்
ஆண்டான் குளம்
அருஞ்சுவை நீரும்
அடுத்த பிறப்பொன்று
இருந்தால் அதிலும்
அங்கே நீராட சொல்லிய காலம்


பச்சை ஓலை பனைமரங்கள்
நுங்கு,பழம்,கிழங்குகளும்
தினம் தந்து கள்ளும்
சுவைத்திடவே சுற்றி
நின்று ரசித்தோமே


உழுத வயல்
உஷ்ண மணமும்
இழையவள்
நாற்றின் மணமும்
முற்றிய கதிரின்
வெட்டிய மணமும்
தூற்றிய நெல்லின்
தூசு மணமும் -சூடு
மிதிக்கும் இயந்திரமாய்-இன்னும்
சுற்றிக்கொண்டு இருக்குதே
இதயத்தினுள்ளே,,!


அறியாத வயதில்
அனுபவித்த மகிழ்ச்சியை
தொலைத்து விட்ட..
அறிவின் துக்கங்கள் என்னுளே..!


வயல் வரப்பில்
வாடினாலும்,வளமான
வாழ்க்கையில்லை
விளைச்சளுக்கேற்ற
விலையில்லை,
விலையேற்றம் விழவில்லை,


கால்வயிறு சோறுண்டு,
காணி நிலமில்லை,

கண்ணீரில் கரைகின்றான்
நிகழ்கால விவசாயி,
கவலை மறந்து குதிகின்றான்
எதிர்கால விவசாயி

Friday, March 13, 2015

இரும்பா! இவள் இதயம்.

இரக்கமற்ற மனிதருள் -என்னால்
இடத்திற்க்கேற்றால் போலே
இயங்க முடியவில்லையேன்?

இதயத்தில் வலியும் -என்
இமைகளில் துளியும்
இடைவெளி இன்றி சிந்தினேன்
இருந்தும் முடியவில்லை.

இரும்பு இல்லை இதயம் என்று
இறக்கமற்ற இவளுக்கு,
இறைவா ஏன் புரியவில்லை?

உன் படைப்பில் பிழையா?
என் பார்வையில் பிழையா?
படைத்த உன்னை குற்றம் சொல்லி
பலியை உன் மேல போட -நான்
படித்த பண்டிதன் இல்லை

உறவாய் அவள் இருந்து
உள்ளத்தை தான் பறித்து
உணர்வை சிதைத்து விட்டு
உண்மையை மறந்துபோக-என்
உயிரும் ஊசலாடுதின்று

தலையிடி காய்ச்சலும்
தாறுமாறாய் தாவியது,
தலை சாய்த்து நான் உறங்க
தாய் மடியிங்கில்லை,-ஆனால்
தள்ளி நின்று ரசிபதற்க்கு
தாராள உறவு பல,,!

பாசத்தை தேடி சென்று,
வேசத்தில் வெந்து போனேன்
வேண்டாம் இல் வாழ்வு
போதும் இவ் வாழ்வு
இல்லை ஏன் நின்மதி -ஆமாம்
வேண்டும் என் வெண்மதி...!

Thursday, March 12, 2015

பொல்லாத நினைவுகள்

ஆற்று நீரின் அறுசுவை
அறியாதோர் யார் உண்டு
என் தமிழ் மரபிலே,,,!


காடுமலை தாண்டி வந்து
கஞ்சிக்கு தண்ணி கொண்டு
கரைசேர்ந்த காலமது,,,,!


பள்ளிப் பருவத்திலே
காத்திருந்து வீற்றிருந்து
தண்ணீரை பருகையிலே
ஆஹா என்ன சுகம்
ஆற்று நீரிலுமே,,!


மரம் செடி கொடியெல்லாம்
மறவர் தம் புகழ் பாடி,
ஓடி செல்லும் நீரினிலே
ஒட்டி கொண்ட சங்கீதத்தை
ஏடு பாரா ஏழையும்
எடுத்தியம்பிய காலம் அது,,,!


குளத்து நீரினிலே குதித்து
கும்மாளம் போட்டதுவும்,
குறத்தியர் குளிக்கையிலே
கூடிக்கிண்டல் செய்ததுவும்,


அப்பாவின் சரம் எடுத்து
ஆத்து மீன் பிடிக்கையிலே,
மீனோடு சரம் நழுவி ஆறோடு
போகையிலே, ஆலம் விழுதெடுத்து
அப்பா அடிச்ச அடி -அச்சோ
அடையாளம் அழியாமல்
இருக்குதல்லோ..


பச்சை மரத்திலே- காலம்
பாய்ச்சிய ஆணியை போலே
பசுமையான நினைவுகள்
பதிந்ததே மனமதினில்.


காலம் கை நழுவி தழுவிப்
போனாலும் - நம்மை
ஆளும் நினைவு சில
உசுர உலுப்பி எடுக்குதையா
மீண்டும் வந்திடுமாய்யா-மண்ணுள்
மாண்டு போனா நம் இளமை..!

Wednesday, March 11, 2015

என்னவளே ஏற்றிடம்மா.

ஓரப் பார்வையால் என்னை
ஒளிப்பதிவு செய்தவளே,
ஐநா பாதுகாப்புச் சபையும்
ஆணையது பிறப்பிக்கும்
நின் பார்வையிலே உண்டு
பயங்கற வாதம் என்று,


நிலையற்ற வாழ்வில்
நிஜமாக தோன்றியவளே,
நீ தேடிய சொர்க்கம்
நான்தான் என்றவளே,
தோழமையும், தாய்மையும்
தாரை வார்த்தவளே,


அன்பையும், காதலையும்
பருக கொடுத்தவளே,

பெண்மை இதுதான் என்று
அறிய வைத்தவளே,-என்
ஆண்மையின் ஆணவம்
உணர வைத்தவளே,


உயிரை பிய்த்தெடுக்கும்
வலியும் இதுதான் என்று
உணர வைத்து-நீயும்
உயிரையும் பறிக்கலாமோ?


உன் சந்திர வதனத்தையும்
சங்கு கழுத்தினையும்
தொடுகின்ற ஆபரணத்தை
ஏக்கமாய் பார்த்தே -உன்
இடைதழுவும் நூலாக
இரவு பகல் தவமிருந்தேன்


விருப்பமெல்லாம் உன் மேலே
விரிமலரே என்னை நீயும்
துரும்பென்று எண்ணாமல்
தூயவனை ஏற்றிடுவாய்.


புண்னான என் நெஞ்சிற்கே
புதுமருந்தாய் வந்தவளே!
தூயவளே என்னையுமுன்
துணையாக ஏற்றிடம்மா!

Tuesday, March 3, 2015

உரைப்பாயா உறவே நீ,

அழகிய கன்னி ஒருத்தி!
இந்தநாள் நினைவினிலே
என் அடிமனக் கனவினிலே!
அடிக்கடி வந்து போனால்.


அவள் பெயர் சொல்கையிலே
மனதில் ஒரு புன்னகை - இன்று!
மயக்கும் அவள் விழிகளில்
மயங்கின என் மொழிகளும்!


மயக்கிய விழிகள் யார் என்று
நான் மதி மயங்கி நிற்கையில்
என் மனையாள வரும்
மாங்குயில் நீ தான் என்று
மறைமுகமாய் சொன்னாயடி,


நிலவோடு தனியாக-நானும்
நீ இன்றி இருக்கையிலே
நின் நினைவுகள் நித்தமும்
என்னோடு நிரந்தரமாய் நிற்குதடி.


கத்தும் கடலலையும்
கை கட்டி நின்றிடும் டி
கடல்கரை தனிலே நீயும்
கால் நனைக்க வந்திடவே,


சொட்டுத்தேன் வடியும் நின்
செக்க செவ்விதல் திறந்து
பட்டுப்போன என் மனதில்
பால் சுரக்கும் வண்ணம்


அறியா பாலகன் எனக்கு
நீ எட்டு உரைப்பாயோ அழகி
நம் காதல் கதையதன்
கருப்பொருள் என்னவென்று

Monday, February 16, 2015

அப்பாவே ஆசான்.

அப்பப்பா தந்ததில்லை
அம்மப்பா கண்டதில்லை,
அனைத்தையும் அளித்தவர்

அப்பா நீ ஒருவர் தானே,


ஆண்வர்க்கம் அனைத்திலும்
இல்லை ஓர் தர்க்கம்
என்பதைப்புரிந்து கொள்ள
அப்பா நீர் சாட்சி!
ஆண் பெண் என்பதை
பால்கொண்டு அளப்பதைவிட
கற்ற நூல் கொண்டு
அளக்கச் சொல்வாயே!


கஷ்டமே அறியாமல்
காத்திட்ட என் அப்பா,
உன் பணி நான் எடுத்து
பொறுப்புக்காய் பொருள் சேர்க்க
புறபட்டேன் புது தேசம்,


பிடி சோறும் இறங்குதில்லை-
உன் பிறந்தநாளென்று
எண்ணுகையில்,-இன்று
மறந்தே போனது அப்பா-நீங்கள்
தொலைந்த நாளும் கூட,


வாழ்வின் ஆதாரம் நீயும் -எங்கோ
சேதாரமாய் போகையிலே
வலிக்கின்றது அப்பனே,!
எங்கள் வாழ்கையும்,-வழி
காட்ட நீயும் இன்றி-
தவிக்கின்றாள் அப்பனே
உந்தன் தாரமும்,,


முத்தாய் மூன்று அன்னைக்கு
சொத்தாய் கொடுத்து விட்டு
சொந்த பந்தம் விட்டு-எந்த
சிங்கள காடையனிடம் சிக்குண்டு
கிடக்கின்றாய் அப்பா?

பால்குடி மறந்து நானும்
பலவருடம் ஆனது அப்பா
பக்குவமாய் பேனை எடுத்தும்
பரிந்து பேச பாசம் இன்றி -நான்
பாரினிலே தவிக்கின்றேன் அப்பா,


முப்பதிரெண்டும் முன்னேகாட்டி
முத்து சிரிப்பினிலே முழு
தேசம் ஆள்பவன் நீயோ-இன்று
முகவரி இன்றி இருகின்றாய் அப்பா?


அப்பா(ஜெயராசன்) உன் பிறந்தநாளில்
கடவுள் உன்னை காத்திடவும்,
காலம் நம்மை சேர்த்திடவும்
வக்கத்த உன் பிள்ளை நானும்
வாழ்த்துகின்றேன் வரியினிலே,


பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,
15-02-2015

காதலர் தின நல்வாழ்த்துக்கள்,!

எதுகை மோனை வடிவத்தில்,
கவிதை கோர்க்க சொற்கள் தேடி-உன்
பெயரையே கோர்த்துக் கொண்டு,
புலம்புதடி என் விரல்கள்... !


Happy Valentines Day friends,

அதிசயமே அவளங்கம்!

செவ்விதழ் பார்த்தவுடன்
செந்தமிழும் முட்டுதடி
உன் முகவரிக்கோர்-கவி

வரி தயங்காமல் எழுதென்று!


சகாராவை சார்பாக வளைத்து
வடிவமைத்த கன்னங்களடி-அங்கே 

ஈழமும் உள்ளதோடி
உன்னிரு விழிகளாக!
?

சிவனொளி பாதமும் உன்
சீர் கொண்ட நெற்றி மீது
புருவமாக படர்ந்து உள்ளதே!
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
அனைத்தும் காண்பதற்கு
அந்நியர்கள் செல்கின்றனரே!
அயல் நாட்டு தேசங்களுக்கு!

அதிஷ்டகாரன் நானும்
அயல் தேசம் செல்லாமலே
கண்டு விட்டேன் அழகியிடம்!
அதியங்கள் அத்தனையும்!


அன்பாலே அடிமையாக்கி
அறிவளே அழகனாக்கி
அதிசயத்தால் கிறுக்கனாக்கி
அமைதியாய் செல்கின்றாயே,
அயோத்தி நாட்டு அரசியைபோல்


ஆணையிது அறிந்துகொள்
அதிசயமடி உனதங்கம்-அவை
அத்தனையும் எனக்கே சொந்தம்

Tuesday, February 3, 2015

ஊனமும் உள்ளமும்!

வால் அறுந்த
பல்லிக்குத்தான்
வலிமை அதிகம் தோழா!

கிளைகள் உடைந்தாலும்
மரங்கள் மரணிப்பதில்லை
நேரம்வரும் போது-அவை
உணர்த்தும் ஊனம்
இருப்பினும் உயிர்வாழும்
அவசியத்தை...!

உறுதிகொள், நாம் சாய்ந்து
நடந்தாலும்!-நம்
சாதனைகளால்-என்றும்
நிமிர்ந்தே நிற்போம் என்று!

பிறப்பில் வந்தது ஏதுமில்லையே!
இறப்பில் வருவது ஏதுமில்லையே!
நிகழ்வுகள் மட்டுமே நிதர்சனமே!
அகன்று விரிந்த ஆல் போல்-உன்
சிந்தைகளனைத்தும் சிறக்கடும் தோழா,!

Monday, February 2, 2015

விலை போகும் மானிடம்!

 மதுவின் போதையில்
மனிதத்தை விற்றீர்கள்..!
மங்கையை மனைவியாக்க
தன்னையே விற்றீர்கள்..!


விலைமாதுக்கு விலைபோன
விசமிகளே கேளுங்கள் -அவள்
விழிநீர் சிந்தும் வலிகளை!


கஞ்சிக்கு வழியின்றி -உம்
கட்டிலுக்கு வருபவள் தான்
கற்புக்கு பெயர்போன
கண்ணகி குலமடா அது!


காடயனாய் நீ மாறி-அவள்
கற்பை தின்று விட்டு
காசையும் வீசி விட்டு
வேசி எண்றும் ஏசி விட்டு ?
வேறு வீடு சொல்கின்றாயே!
வெட்கம் கெட்டவனே!


குருவியை போல் இரை தேடி,
கருவியை போல கட்டிலில் கிடந்தாள்
பசியென்ற நோய் போக்கவே...!
படுக்கையில் பிணமாய் கிடந்தவள்
பணமாய் தினமாய் உளைத்ததுவும்
பஞ்சப் பிணி போக்கதானே!


நிர்வாணத்தை நிரந்தரமாக்கி
அவள் வண்ண மேனியை
வரிகுதிரையாய் கீறியவரே
கேளீர் அவள் வலிகளை.


வசதியாய் சொல்லும்போது
விபச்சாரி, விலைமாது
நவீனமாய் மொழிகளில்
பாலியல் தொழிலாளி,
பட்டம் வசைபாடும்போது
வேசி, தேவடியாள்
வசதிகேற்றாற்போல் வைத்தீரே
வார்த்தையிலும்..படுக்கையிலும்!


விபச்சாரி என்று பெண்ணை காட்டும்
பெருச்சாளிகளுக்கு சொல்லுங்கள்.
பணத்திற்கு படுத்து எழுந்து
பசிதீர்த்துக் கொண்டவனும்
விபச்சாரிதானென்று,,,,!

Saturday, January 24, 2015

சாதிகள் கடந்து வா!

இது பொய்யர்களின் உலகம்!
வாழ்க்கையை இனிப்பாக்க
உண்மையை கசப்பாக்கி
கொண்டவர்கள் நாம்!


படிகட்டுகளுக்கும் சாதி
சொல்லிகொடுத்த சதிகாரர்
வாழும் பூமியிது!


தாகத்திற்கு தண்ணீர் கேட்க
சிரட்டையில் சிறுநீர் கொடுத்த
சிறுபான்மையினமடா இது!,


கடவுளின் சந்நிதி நெருங்க
காடையர்கள் தடை போட்ட
மாயலோகம் இது!


நியாயம் எல்லாம் அநியாயம்
என்று அடிமைகளாய் அடிமாடுகளாய்
அடித்தனுப்பிய வையம் இது!


மனிதம் பறிபோக
மாறிய சாதி வெறியன்
வாழும் நரகம் இது!


வெள்ளையன் வெளியேற
வெறிபிடித்தோர் வெங்காயங்கள்
வேர்விட்ட உலகம் இது!,


அத்தனையும் ஆடிய நீ
ஆள் அரவமற்ற வேளையில்
அடுத்த சாதி அழகியை.
புணர்வதற்கு "புறா" அனுப்புகையில்
சாதி எங்கேடா?
சட்டென்று மறைந்தது?

Tuesday, January 20, 2015

விதியே விடை கூறு!

வாழ்கை கடலில் நீந்துகையில்
முன்னாடி சென்றவர்கள்
முன்னேறி இருக்கலாம்
மூழ்கியும் இருக்கலாம்..!
பின்னாடி வருபவர்களுக்கு
நான் முன்னாடிதான் ...!


முன்னாடி சென்றவர்களை
பார்த்து பொறாமை படவா,?
பின்னாடி வருபவர்களை
பார்த்து பெருமை படவா?


வயதை தொலைக்கிறோம்
பாசத்தை இழந்தோம்
பல வருடங்களாய்...
எதிர்காலத்திற்காக நிகழ்கால
சந்தோஷங்களை புதைத்து
பொருள் தேடுகிறோம்..
முழுமையாக செல்வோம் என்ற
நம்பிக்கை இல்லாமல்..


எல்லாமே கனவில் தான்
தாய் தந்தை தம்பி தங்கை பாசம்
வாரம் ஒரு முறை என்றானது!.
சில நேரங்களில்
மாதம் ஒரு முறைதான்
கைபேசி இல்லை என்றால்
எங்கள் பாசம் வெறும் காகிதத்தோடு
கரைந்து இருக்கும்......!


ஆந்தைகளும் ,
புல்லுருவிகளும்
வாழும் இவ்வுலகில்,
படித்த பள்ளிப்பாடம்
தோற்றுத்தான் போய்விட்டது...!
அனுபவ வாழ்க்கையே
படிப்பாகிப்போனது...!
விடை தெரியா வினாவுக்கு
தேடலே ............?
வாழ்க்கையாய்ப் போனது .


விடை தெரிந்தவர்களுக்கு
குழப்பம் கும்மியடித்தது ...!
சரியா...? தவறாயென.?
கணிக்கும் முன்னே ,
காலம் கடந்து விடுகிறது ..
வாழ்வு முடிந்து விடுகிறது ...!
விதியே விடை கூறு,
வினாவாகி போன என் வாழ்வுக்கு?