Thursday, July 16, 2015

திசை மாறும் காதல்



கொஞ்சம் விலகி நின்ற போது!
நெஞ்சம் தாங்க வில்லையே
வார்த்தை இல்லாமல்..,
வாய்ப்பும் இல்லாமல்..,
உன் வட்ட விழிக்குள்
பார்க்கவும் இயலாமல்..,
சொல்லிய காதலொன்று
சிக்கி கிடக்குது -என்
நெஞ்சு குழிக்குள்.

நியாயமற்றதாய் தோன்றினும்
நீண்டு கொண்டே போனதே
நம் நேசம் வான் வெளி போல்.
உறவுகள் இருந்தும்
என் உயிர் நீயேன
உயில் எழுதி தந்தேன்
என் உயிர் ஓவியமே??

இப்படி உன்னுடன்
பழகிய நாட்களில்..,
உன்னை வெறுக்கும்
படி ஒன்றும் இல்லையே
பிறகெப்படி உன்னை மறப்பது

பார்வைகளின் மோதல்களால்
நொறுக்கப்படும் ஞாயிறுகள்..
முள்ளில்லா கடிகாரம்......
ரத்தமின்றி நடக்கும்
ஒரு இதய
அறுவை சிகிச்சை...

நித்தம் உன்னை நினைத்து..
நெஞ்சில் ஏற்படும் ரணம்
எனக்கு பழகிவிட்டது

நீ என்னை வெளியேற்றிய போதும்.
வருத்தப்படவில்லை அன்பே.

வேறொருவனை...,
குடியேற்றிய போது தான்...,
நொந்தளுதேன் - உன் இதயம்
ஒரு வாடகை வீடு என்ரறிந்து..!

Thursday, July 2, 2015

மலடி மனம்


அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து
அடியெடுத்து நீ வச்சாலும்
ஆண்டவன் கணக்கிலும் கூட
அறியா பிழை இருக்குமம்மா

மணமுடிச்சு மாசமாச்சு
மடி இரங்க மறுத்ததிங்கே
மாயம் தான் என்னவென்று
மருத்துவரை நாடுகையில்
மலடி என்று பட்டம் சூட்டி
மறைமுகமாய் அனுப்பிவைத்தார்,

மாசம் மூன்று போச்சே என்று,,!
மாமியாரும் முறைச்சு பார்க்க
மணமுடிச்சு வந்தவன் தான்
மனசறிஞ்சு நடப்பான் என்றா,

மணிநேரம் பார்க்காம -மூன்று
மாசமாக்க நிக்குறான்!-இல்ல
மனைவி என்று ஒருத்தி தேடி
மலடி என்னை ஒதுக்குறான்,

கட்டில் கால்களுக்கும் வாய்
இருந்தா கத்தி சொல்லும் -நான்
கட்டிலில தினம் கதறும் கத,

கருப்பைக்கும் வெறும்பைக்கும்
வேறுபாடு தெரியாம அடிவயிற்றில்
ஆண்டவனும் அறியமா
அமைச்சு விட்டான்,,,,!

மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!
பலிக்காம போகையிலே
அதற்க்கு புனைப்பெயர்கள்
பல கொண்டு இப் புதுச்சமூகம்
அலைக்குதென்னை,,,,,,,,,!

பெத்தெடுத்து வளர்த்தாலும்
தத்தெடுத்து வளர்த்தாலும்
தாயவேன் நானும் என்று -தாங்கி
கொண்டேன் வலிகளையும் இன்று.!