Friday, November 28, 2014

மனதில் நிற்கும் மாவீரரே!

புழுதி பறக்க பாய்ந்து வரும்,
கொம்பு சீவிய முரட்டு காளைகளை
மார் நிமித்து எதிர்த்து நிற்கும்
சிறுத்தை என் தமிழன் ..!!


வங்காளக் கடலும் ,
இந்தியப் பெருங் கடலும்-என்
வீட்டுப் பெண்களின் மீன் பிடிக்கும்
ஏரிகள் தான் என்றும்
நாம் எதிரிக்கும் புலிகள் தான்!


காற்றாகிக் கரும்புலிகளாய்
வெடித்துச்சிதறினீர்கள்!
கடலோடு கடலாகி
நீராகிப்போயினீர்கள்!
பட்டினியால் வாடி
வதங்கிப்போயினீர்கள்!
எதிரியின் பிடியில்

 நசுங்கிப்போயினீர்கள்

தேகத்தை திரியாக்கி
தியாகத் தீபமேற்றினீர்
இன்று எம் தேசமே
நாசமானதே தோழர்களே !!!  


மலைமலையாய்த்
தமிழர்களின் பிணங்கள் -ஈழ
மண்ணெங்கும் குவிந்ததன்று
தடுப்பார் யாரும் இல்லையே அங்கே!


கண்மணிகளே..!
கல்லறை வந்து
உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி
கண்ணீர் வடிக்க
தவிக்கிறது மனசு...


என்ன நடக்கிறது
எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
புதைபட்டு மண்ணுள் புழுவாகி
போனான் தமிழன் என்று யார் சொன்னது?


வீட்டுக்கொன்றாய் விதையைக்கேட்டு
நாட்டுக்காக நட்டடு வைத்து!
கல்லறைக்குள் துயிலும்
கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும்
கருவேங்கைகளுக்குத்தெரியும்.!


புதைபட்டுப் போகவில்லை-
தமிழன் அங்கே!
புதுநாடு பிறப்பெடுக்க! -
பூமிக் குள்ளே,!
விதையாகிப் போயுள்ளான் !

 

புன்னகை மன்னன் புலிகளின் தலைவன்!

கரும்புலியாய்
களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாயென்று
அந்த காடையர்கள் கூரினரே!
எத்தனை காலம்கடந்தும் – எம்
தமிழினம் காத்த கடவுளாய்
நாம் உன்னை கண்டு
கொண்டேயிருப்போம்…! 


நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் – அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்…!


ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்து விரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று நாங்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்…!


உறவாட வேண்டிய இடத்திலேயே
முகாமே சிறைச்சாலைப்போல்
மாறிப்போனதால்
மூச்சுக்குள் உன் ஞாபகம்
வந்தபோதிலும் முடங்கி கிடந்தே
இரவல் வீட்டிற்குள்ளேயே
இறந்துகிடக்கிறோம்
அனாதையாய் நாம்…!


முன்னோடி தமிழனென
வானோடி வானம்பாடிகளாய்
வலம்வந்து வான்புகழை
வையகத்தில் வெளிக் கொணர்ந்தாய்
தமிழனையே தலைநிமிர வைத்த
தமிழ் மகனே…!


புன்னகையின் மன்னன்!
புலிகளின் தலைவன்!
"வேலுப்பிள்ளை பிரபாகரன்"
பல்லாண்டு காலம் நீங்கள் வாழ
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்!

உயிரி{றவி}ன் உருவம் அவள்!

வான் நிலவே!நம் உறவு
ஆண்டொன்று ஆனதின்று!
ஆகையாலே சிந்துகின்றேன்
உன் நினைவில் சிறு துளியை!


என்னத்த நான் சொல்ல
என்னவளே உனை பற்றி!
என் பார்வை பட்ட வரைக்கும்!
எல்லாமே அழகுதாண்டி


சந்திர பொட்டுக்காரி!
சங்கு கழுத்துக்கு காரி!
சடைமுடி அழகுக்காரி!
சந்தன மேனிக்காரி!


பால் வண்ண நிறக்காரி!
பாவாடை தாவணிக்காரி!
பார்வையாலே கொள்ளும்,
பாசக்கயிறுக்காரி!


கன்னி உனக்காய் காத்திருக்கும்
வேளையெல்லாம். -உன்னோடு
நேற்றிருந்த ஞாபகங்கள்
பூத்திருந்து தாலாட்டுது என்னை! 
 


அடிமுடி தேடிய கதைபோலே
முழுமதியே உன் நினைவில்
முழுமையடையா இக் கவியின்!
குறைதீர்க்க வர வேண்டும்-என்
குலவிளக்கை ஏற்றி நீயும்!


அகவையொன்று கடந்த உறவு
ஆண்டு பல தொடர வேண்டி!
ஆண்டவனை வேண்டுகின்றேன்!

Monday, November 24, 2014

திருமணம் மகிழ் மனம்!

சொந்தம் பல சூழ்ந்து நிற்க -என்
பந்தம் என்று வருபவளை-மஞ்சள்
கயிறு கொண்டு கட்டி-அள்ளி
அணைத்து கொள்ளும் வேளையது!


அல்லி பூத்தார் போல
அழகியவள் அங்கமெல்லாம்
ஆபரணத்தில் ஜொலிக்க!
ஆண் என்ற அகங்காரம்-அழகாய்
ஆடவன் உள்ளத்திலும்
சிறிதாய் பிறக்க!


அந்தி மாலைவேளை வரையில்
சின்னஞ் சிட்டுகள் இருவர்
கழுத்திலும் பட்டு ரோஜா!
மலர்மாலையும் தொட்டு
தவழ்ந்து விளையாடும் போது!


இருமனம் ஒரு மனமாகி
திருமணத்தில் இணைந்து
புதுமணம் மலர் மனம் கமழ
திருமணமும் இனிதே
நிறைவுறும் பொழுது!!


இராத்திரியின் நாயகனாய்!
இருளின் ரசிகனாய்!-இல்லற
வாழ்வின் முதல்வனாய்!
காமனவன் காவு கொண்டன்
அன்பு உள்ளம் இருவரையும்


இதமான இடம் தேடி!
இதழ் சுவை தனை நாடி!
இனிதான சுகம் தேடி!


இயற்கையின் மடியில் தவழும்
இல்லற வாழ்வின் குழந்தைகளா!
மணமக்கள் திகழ்ந்தனர்-முதல்
இரவு என்ற மூச்சடக்கி
முத்தெடுக்கும் பணியில்!


முதல் இரவு முடிவிரவாக
மும்மாதம் முக்குளித்து!
முத்து ஒன்று கருவானதை
முழுமனதோடு அறிந்து!!


ஈர் ஐந்து மாதம்
இரவு பகல் விழித்திருந்து
ஈருடல் ஓர் உயிராக்கிய உயிரை
இருபதே வினாடியில் -தாயவள்!
தவமிருந்து பெற்றெடுத்தால்!
தரணியிலும் உண்டோ மானிடர்க்கு
அதை விட வேறு இன்பம்!

Tuesday, November 18, 2014

வாய் பேசு கிளியே!

பாவாடை சட்டை போட்டு
பைங்கிளி நீயும் வந்தால்
பட்டினத்தாரும் பல்லிளிப்பார்
பாவையே உன்னை பார்த்து!


பால் நிலா உன்னை நினைத்து
பஞ்ச பூதங்களும் பாட்டிசைக்குமே!
பாவபட்ட உள்ளமடி இது
பாராமல் சென்றிடுமா உன்னை!


பச்சிளம் மழலை பேசும்
பச்சை பசும் சொல்லாய்
பாவையுன் மொழி இருக்க
பார்த்த உள்ளம் இது
பேசாமல் சென்றிடுமா தனியே!


கோதை நீ கோர்த்த வரிகளில்
கோடி சுகம் நானும் கண்டேன்
கோபத்தில் நீ குதித்தாலும் -என்
கோட்டைக்கு அரசிதாண்டி நீ!


ஆஹா வரிவரியாய் முட்டுதடி
அன்னக்கிளி சின்னக்கிளி
அசைந்தாடி வரும் செல்லக்கிளி
நம்காதல் முத்துக்குளி எப்போது!
மொழிந்து விடு என் மதுரங்கிளியே!!

Saturday, November 15, 2014

முழு பெயருடன் முதல்வரி வாழ்த்து!

(இ)-இல்லறம் சிறக்கவென்று
இனிதாய் வரம் வேண்டி 
சேகர்+சுகந்தி தம்பதிகள்
இனிய மணம் முடித்தவேளை!


(ரா)-ராத்திரிக்கு நாயகியாய்
ஆண் மயிலின் அழகுடனே
பெண் மயில் நீ பிறந்தாய்
பெற்றோர் மனம் மகிழ!


(ச)-சகானா என்று பெயர் சூட்டிட 
சுட்டி தனம் நீ காட்டிட 
உன் குட்டிக் குறும்பனைத்தையும்
கட்டி காத்து காவல் நின்றனரே!
 உன் தாய் தந்தையரே!


(சே)-சேற்றை வாரி நீ பூச
சேர்ந்தே தாமும் பூசிவிட்டு
செல்ல மகள் நீ மகிழ
சேர்ந்தே தாமும் சிரித்தனரே!
வஞ்சம் இல்லா நெஞ்சதோரடி
உனக்காய் வாழும் பெற்றோர்கள்!


(க)-கண்டிக்கும் வேளையிலும்
சுதந்திர காற்றாய் பறக்க விட்டு
சுற்றித்திரிந்து நீ வந்த போதும்-அன்பால்
அள்ளி அணைத்து கொண்டவர்கள்
உன் அன்னை தந்தையரே!


(ர்)-ர்ர்ரர்ர்ர் என்ற ஓசையுடன்
ரீங்காரம் பாடிவரும்-சில்
வண்டுகளும் வியந்து நிற்குமே
வாச மலர் ஒன்றுக்கு இன்று
பிறந்தநாள் என்றறிந்தால்! 


(ச)-சலசல என்ற நீர் வீழ்ச்சியின்
சத்தங்கள் ஓய்ந்தாலும்
கன்னத்தில் குழிவிழவே
கட்டழகி நீ சிரிக்கும் கலகலப்பு
தீராதே என்றும் உன் வீட்டில்! 


(கா)-காதலை விட்டெறிந்து
காவியம் தொட்டபோது நட்பென்ற
சொல்லுக்கு நாமிருவர் தான் என்று
நாடும் போற்றும் உறவு கொண்ட
நல்லுள்ளம் நீயடி தோழி!-உன்னை
நலம் வாழ வாழ்த்துகிறேன் நானும்! 


(னா)-னாவென்ற எழுத்துக்கு மணமுடிக்க
மாப்பிள்ளை தேடுவது போல-நாள்
முழுக்க சொல் தேடினேன் தோழி!
சிக்கிய எழுத்துகளையும்
சிக்காத சொற்களையும் கொண்டு
சிறு கவி நான் வடித்தேன் -தோழி
நீ உதித்த நாளுக்கு வாழ்த்துரைக்க!


உன் குறும்புச் சிரிப்புடனும்
குதூகலப் பார்வையுடனும் நட்பே -நீ
நலம் வாழ வாழ்த்துகின்றேன் நானும்!

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
"இராசசேகர் சகானா!"
 

Friday, November 14, 2014

சிறைச்சாலை!

பூக்கின்ற பூவிடமும்
பூவா செடியிடமும்
இரவோடும் பகலோடும்
பசுமையான வயலிடமும்
கரைபுரண்டு ஓடும் நதியிடமும்
சொல்லுங்கள்!


உம்மை கண் கொண்டு காண-சில
துயர்படும் மானிடமும்-பல
தூங்கா கயவர்களும்
சிறைக் கம்பியினுள்ளே
காத்திருக்கின்றனர் என்று! 


முடிச்சிட்ட கயிறொன்று
ஒருவன் மூச்சை நிறுத்தக்
காத்திருக்கிறது!
சிறைசாலை என்ற கூட்டுக்குள்


பாசமான்கள் சிலரையும்
பாவிகள் பலரையும்
அந்தப் பாசக் கயிறு
பார்த்திருக்கிறது! 


ஒருவன் எப்படி சாகக்கூடாது
என்பதை அவன் மரணம்
மற்றவர்க்கு உணர்த்தும்! 


ஒருவன் எப்படி வாழக்கூடாது
என்பதை அடிமையொலி மூலம்
உணர்த்திய பள்ளிக்கூடம் !
சிறைச்சாலை!

யார் செல்வந்தன்?


உழைத்துக் களைத்த
உடலுக்கு...
உறக்கம் வந்தால்
இடமென்ன...
பொருளென்ன..


அசந்து உறங்க
ஆறடி இடமும்
ஆங்காங்கே கிழிந்த
கந்தல் துணி கூட போதும்!


ஆனால்
அவ்வுழைப்பாளிகளின்
இரத்ததினை உறிஞ்சிக் குடிக்கும்
பணக்கார ஓநாய்களுக்கு
பட்டுமெத்தை இருப்பினும்
பறிகொடுத்து தவிக்கிறான்
தூக்கத்தை…


இதில் யார் செல்வந்தன்?

Sunday, November 9, 2014

கட்டழகியில்லா தனிமை!

நீர்  கொண்டு விழி தீட்டி!
நிலம் கொண்டு உடல் தீட்டி!
தீ கொண்டு உன் கோபம் தீட்டி!
வரலாறு கானா உன் புன்னகையை
வான் கொண்டு தீட்டி!
கட்டழகி உன் இடை வளைக்க
காற்றையும் கடன் வங்கினானே
கயவன் அவன் பிரம்மனும்!


பஞ்ச பூதத்தையும் பஞ்சாய் சுருக்கி
பைங்கிளியே உன்னை வடிவமைத்தானே
வஞ்சம் இல்லா நெஞ்சத்தான் போல
உன்னை வடிவமைத்த பிரம்மனும்


உன் கன்னத்தில் குழி விழுத்தி
என் காதோரம் சிரிபொலி விழுத்தி
காதல் என்ற வலை விரித்து-ஏன்
கவிழ்த்தாயடி காதலியே என்னை நீ !


காமம் என்ற உலகினிலே
காதல் என்ற போர்வை போர்த்தி
நகர்கின்றதே பலர் வாழ்வும்!
சிறகடிக்கும் மனதுக்கும் சிந்தயடக்க
வழி இன்றி தவிக்கின்றதே என் வாழ்வும்!


உடையளவு இடையளவு
அத்தனையும் வினாவி விட்டேன்
உலகளவில் கிடைக்கா உன்
உடல் அழகை அறிய
ஆண்டு பல காத்திரு என்று
அவகாசம் சொல்லி விட்டாயே!


நினைவெல்லாம் நீயாக
நியமெல்லாம் நினைவாக
நியமான உன் நினைவை
நினைத்தே கழிகிறது
நீ இல்லா என் வாழ்கை


தனிமை இரவில் உறங்கா நினைவில்
காதலி நீ வருவாய் கனவாக!
அது முடியும் பொழுதில்
விடியும் பகலில் தினம் நீ இருப்பாய்
என் கவியாக!

Wednesday, November 5, 2014

கண்மணியே நீ வாழ்க...!

பெண்ணே ...
உன் பெற்றோர் இட்ட
பெயரைக் கூட சுருக்கி
எத்தனை பெயர்கள்
வைத்தேன் உனக்கு
ஏன் தெரியுமா ...?


அத்தனை ஜென்மங்கள்-நீ 

என்னுடன் வருவாய் 
என்று அல்ல வாழ்வாய் 
என்று தான் அழைத்தேன்!

இது புரியா இமை அழகியே
ஏன் திட்டுகிறாய் என்னை
போட வெட்டிப்பயலே என்று...
ஒரே வார்த்தையில் கட்டி போட்டு 

ஓராயிரம் வார்த்தையில் 
வெட்டியும் போ(ய்)ட்டாயே!

வந்த இடம் வளம்  பெற்றேன்
சென்ற இடம் செல்வம் பெற்றேன்
கண்மணி உன்னை கண்ட இடத்திலே
என் உயிர் காதலை பெற்றேன்

கனவெல்லாம் நியமாக்கி 
கண்ணீரையும்  சுகமாக்கி ய நீ!
இதயத்தை ரணமாக்கி

இணை பிரிந்துபோனாயே
இதயமற்ற மனிதரோடு

உன் இதழ் சுவை கண்டதில்லை
இணை பிரிய நினைத்ததில்லை
இருக்கும் வரை இதயம் தந்து
இறந்தும் என் உயிரை தந்து 
உனக்காகவே வாழ்வேன் என்றும்!

நீ மன்னிப்பாய் என்று ...!


இதழ் விரியும் முன்
இதயம் ரசித்துவிட்டதால்
புன்னகை என்றேன்


இமை திறக்கும் முன்
கண்கள் வலித்துவிட்டதால்
கண்ணீர் என்றேன்


ஆனால்
உதயம் வரும் முன்
உணர்வுகள் பிறந்ததால்
காதல் என்றேன்


அந்த காதல்
கலையும் முன் காமம்
முடிந்ததால்
தாய்மை என்றேன்


நான் என்ற சொல்
நாட்டில் நாம் என்று
மருகும் முன் மறந்துவிட்டேன்


என் மனதை
நீ மன்னிப்பாய் என்று!

Sunday, November 2, 2014

சுட்டது சுடு சொல்!

அன்பைத் தேடி அலைவதனால்
உன்னுள் அன்பும்,
அடக்கமும், பாசமும், பண்பும்
இன்பமும், இனிமையும்
இனிதாய் வந்து தங்கும்


அதிகாரம் தேடி,
சதிகாரனாகி
சாதிக்கப் போவது என்ன ?
விதியே என்று நீயும்,
வீணாகத் தனிமைப் படுத்தப் படுவாய்
வீதியோரத்தில்...


அன்பைக் கொடுத்து விடு
அறிவைத் தந்து, பிறரை
ஆதரிக்கக் கற்று விடு
விதியை வென்று நீ
விண்ணை எட்டிடலாம்.


பிறரைச் சாடி
வதை மொழி பேசுவதால்
மிஞ்சுவதெல்லாம் உனக்கு.


பேயனென்ற பேச்சுத் தான்
நாயே என்றுன்னை
நாலுபேர் தள்ளி வைத்தால்
நீ போய் தனிமையில்
மெளனியாய் அஞ்சாதவாசம் தானே!


வேண்டாம்...வேண்டாம்
விட்டு விடு விவாதிப்பதை.
ஏற்றிடு பிறர் கருத்தை.
அது உனக்குச் சாதகமில்லை
என்றாலும்
சார்ந்து விடு அவர் பக்கம்
சாதிக்கலாம் நீ நிறையவே!

Saturday, November 1, 2014

ஆசை! ஆசை!


மண்ணின் மடியில் 
தலைசாய்க்க ஆசை!
மலருடன் மனம்விட்டு 

கதைபேச ஆசை!

நெஞ்சை நொருக்கும்
கொடிய இடியுடன்
கொஞ்சிக் குலாவி

கொலுபோக ஆசை!

மின்னல் பிடித்து 
வான் ஏற ஆசை!
ஜன்னல் வழியே 

மழைகாண ஆசை!

குடையின்றி சாலையில்
நெடுநேரம் நனைந்து
நடைபோட எனக்கு

நெடுநாளாய் ஆசை!

பௌர்ணமி நிலவில்
கடல் காண ஆசை!
பகல்விரிக்கும் இரவின்

உடல் காண ஆசை!

தலைகோதும் என்னவளின் 
மடிசாய்ந்து நானும்
சிலையாகிப் போயிடவே

பிடிவாத ஆசை!

நிலவோடு ஒரு நாள்!

நேற்றிரவு
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்லவெண்டுமாம்!


நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;


நிலவை களவாடியது
நான்தானென்று தெரியாமல்
என்னிடமே!

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன்முதலாக அன்று
பூமியிலிருந்து மழை பெய்திட
ஆரம்பித்தது!!


அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவைகளிடமே கேட்டேன்!

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?


விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!


என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!

தாய்(நாட்டை)பிரிந்து!


உன் வயித்துல
என் முட்டி மடங்குமுன்னே
முக்காணியில பணம் சேத்தவளே!
உன் வயிறு கனக்கும் முன்னே
ஊர் கனைக்க பேரு வச்சவளே!
தொப்புள்க்கொடி வளருமுன்னே
எனக்கு தங்கத்துல கொடி புடிச்சவளே !


தூங்கிய ஊரை கதறி நீ எழுப்ப
கதறி விழுந்த என்ன பார்த்து
ஆனந்த கண்ணீர் விட்டு நீ அழ!
நான் அழ நீ சிரிச்ச அந்த பொழுதும்
மறக்குமா உன் வாழ்வினில் அம்மா!
சாமத்துல நான் கதற தாயே
உன் மடி சுரந்து உறங்கவச்ச!


புள்ளி மான போல கருப்பு புள்ளி வச்சி
முத்தத்தில தவள விட்ட !
மயிலிறகு கொண்ட கட்டி மல்லிகப்பூ
வச்ச வாசம் என் மூச்சுக்குள்ள நிக்குதடி!
பச்ச நிற மேல்சட்டை பவளநிற கால்சட்டை
எட்டி உதச்ச எனக்கு ஏர்பூட்டி நீ விட்ட!


மூத்த மகன் என்னோடு
முத்தாய் மூணு பெத்தெடுத்த
அதுல ஒன்னு உன் ஜாதி,


உன் உதட்டு சாயமெல்லாம்
என் நெத்தியில நீ வச்ச பொட்டுதானே!
உன் விரலால வச்ச மைய
மல்லிகபூ முத்தமிட்டு நீ அழிச்சியே அம்மா!


அம்மா என்னை பட்டுல படுக்கவச்சி
பட்டுன்னு கூப்டுவதும் சிட்டுன்னு கூப்டுவதும்
இன்னமும் இந்த செவி சவ்வ கிழிக்குதடி!
தாயை விட்டு தாய் மண்ணை விட்டு
தாய்லாந்து வந்து வருடம் இரண்டும் ஆனதே
வழியும் இன்றி வலியும் தொடர்ந்ததே


பார்த்தவரெல்லாம் காத்திரு என்றுரைக்க
காத்திருந்தவர் எல்லாம்
கடல் கடந்து சென்றனரே
அம்மா உன்னை காணமல்
அன்புதனை அறியாமல்
அலைமொதுகின்றதே என் உள்ளமும்


என்று அந்த நாள் என்று
எத்தனை நாள் காத்திருப்பது நானும்
வரிவரியாய் வலிபடிதேன்
இருந்தும் வளருகின்றதே
தாய் (நாட்டை)பிரிந்த
பிரிந்த வலிகள் என்னுள்!