Saturday, January 24, 2015

சாதிகள் கடந்து வா!

இது பொய்யர்களின் உலகம்!
வாழ்க்கையை இனிப்பாக்க
உண்மையை கசப்பாக்கி
கொண்டவர்கள் நாம்!


படிகட்டுகளுக்கும் சாதி
சொல்லிகொடுத்த சதிகாரர்
வாழும் பூமியிது!


தாகத்திற்கு தண்ணீர் கேட்க
சிரட்டையில் சிறுநீர் கொடுத்த
சிறுபான்மையினமடா இது!,


கடவுளின் சந்நிதி நெருங்க
காடையர்கள் தடை போட்ட
மாயலோகம் இது!


நியாயம் எல்லாம் அநியாயம்
என்று அடிமைகளாய் அடிமாடுகளாய்
அடித்தனுப்பிய வையம் இது!


மனிதம் பறிபோக
மாறிய சாதி வெறியன்
வாழும் நரகம் இது!


வெள்ளையன் வெளியேற
வெறிபிடித்தோர் வெங்காயங்கள்
வேர்விட்ட உலகம் இது!,


அத்தனையும் ஆடிய நீ
ஆள் அரவமற்ற வேளையில்
அடுத்த சாதி அழகியை.
புணர்வதற்கு "புறா" அனுப்புகையில்
சாதி எங்கேடா?
சட்டென்று மறைந்தது?

Tuesday, January 20, 2015

விதியே விடை கூறு!

வாழ்கை கடலில் நீந்துகையில்
முன்னாடி சென்றவர்கள்
முன்னேறி இருக்கலாம்
மூழ்கியும் இருக்கலாம்..!
பின்னாடி வருபவர்களுக்கு
நான் முன்னாடிதான் ...!


முன்னாடி சென்றவர்களை
பார்த்து பொறாமை படவா,?
பின்னாடி வருபவர்களை
பார்த்து பெருமை படவா?


வயதை தொலைக்கிறோம்
பாசத்தை இழந்தோம்
பல வருடங்களாய்...
எதிர்காலத்திற்காக நிகழ்கால
சந்தோஷங்களை புதைத்து
பொருள் தேடுகிறோம்..
முழுமையாக செல்வோம் என்ற
நம்பிக்கை இல்லாமல்..


எல்லாமே கனவில் தான்
தாய் தந்தை தம்பி தங்கை பாசம்
வாரம் ஒரு முறை என்றானது!.
சில நேரங்களில்
மாதம் ஒரு முறைதான்
கைபேசி இல்லை என்றால்
எங்கள் பாசம் வெறும் காகிதத்தோடு
கரைந்து இருக்கும்......!


ஆந்தைகளும் ,
புல்லுருவிகளும்
வாழும் இவ்வுலகில்,
படித்த பள்ளிப்பாடம்
தோற்றுத்தான் போய்விட்டது...!
அனுபவ வாழ்க்கையே
படிப்பாகிப்போனது...!
விடை தெரியா வினாவுக்கு
தேடலே ............?
வாழ்க்கையாய்ப் போனது .


விடை தெரிந்தவர்களுக்கு
குழப்பம் கும்மியடித்தது ...!
சரியா...? தவறாயென.?
கணிக்கும் முன்னே ,
காலம் கடந்து விடுகிறது ..
வாழ்வு முடிந்து விடுகிறது ...!
விதியே விடை கூறு,
வினாவாகி போன என் வாழ்வுக்கு?

Wednesday, January 14, 2015

வே(மீ)ண்டும் உதயம்

நம் வங்கக் கடல் தமிழன்
எங்கு குடி இருப்பினும்
சங்கத் தமிழ் சிறப்பை
மறந்து தான் வாழ்வானோ?


பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில்
வெற்றிகள் குவியட்டும்..!


மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது


வெல்லம் அரிசி ஒன்றாய் சேர்ந்து
சொல்லும் செய்தி ஒன்றுதான்!
கள்ளம் இல்லா உள்ளமிருந்தால்
எல்லா நாளும் பொங்கல்தான்!
 


புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்-பொங்குக
எங்கும் மகிழ்ச்சிப் பொங்கல்..!
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Friday, January 2, 2015

மடிந்தாலும் மடி வேண்டும்!

உதயமான சூரியனை கண்டு
உருமாறிய என் விழிகளை கொண்டு
உயிராகிய உன்னை தேடுகின்றேன்!
உடலில் நிறைந்தவளே!
உயிரில் கரைந்தவளே
உள்ளமெல்லாம் உன் நினைவே!
உருத்தெரியா என் கனவே!
உச்சந்தலையில் உள்ள சூடும்
உள்ளங்காலில் ஏறிய குளிரும்
உத்தமியே உன்னைத்தான்
உருவகித்து நிற்கின்றது.
உன்னிடத்தில் கொண்ட பாசம்
உருபெற்று எழும் வேளை
உரு மற்றம் பெற்றாவது
உன்னையே வந்தடைவேன்
உன்னோடு ஒரு நாள்
உனக்கென ஒரு நாள்
உன்னோடு வாழ்ந்திட்டால்
மறுநாளே மண்ணோடு
மடியும் நிலை ஆனாலும்
மானே உன் மடியிலே-என்
மறுயென்மம் வேண்டுமடி!