Tuesday, April 21, 2015

ஆசையில் அவசரம்.


தடையேதும் வந்திடினும்
திசைமாறி போவோம் என்று
திருட்டு முழி பார்வைகளோடு
இருப்பதேனடா????


தத்தி தவழ்கையில் நீயும்
தாயிடம் பிச்சு தின்றதை
மறக்கலாமோ மானிடா?


தங்கதொட்டிலில் அன்றும்
தாவணிக் கட்டிலில் இன்றும்
தடுமாறும் உள்ளங்கள் பல


தடம்மாறி போனவர்களும்-வரை
படம் கொண்டு கடப்பதுண்டு
வையக வாழ்வினை!


படமே இல்லை உன்னிடம்-பின்
பாய நினைப்பது ஏனடா?
மூன்று முடிச்சிட நீயும்
முந்துவது ஏனடா? -முட்டாள்
ஆசையை அடக்கிகொள்
அவனியில் உண்டு ஆயிரம் ஆயிரம்.


அன்னையின் அன்பிலே
அப்பாவின் பண்பிலே
அக்காளில் அரவணைப்பிலே
அண்ணனின் அடக்கத்திலே
தம்பி,தங்கையின் தயவிலே


அனைத்தும் கண்டுகொள்
ஆண்டவன் அளித்திடுவான்
அளவான அழகான
ஆறடிப்பெண் சிலையை..!

Wednesday, April 15, 2015

உயிரில் உரசிய தீ

வெள்ளந்தி சிரிப்பினிலே
வேதம் கற்பித்தவளே.!
தீட்டு நெருங்காமலும்
திகழொளி சுருங்காமலும்
திங்கலேயுன் முகம் தேடி
தினம் தோறும் அலையுறேன்டி


ஏற்ற சோகங்களும்
ஏற்காத கோபங்களும்
தேற்றாத நம் உறவில்
பெருமாள் உண்டியலில்
பெற்று கொண்ட சன்மாமனாய்
கொட்டிய வார்த்தைகள் இங்கே
சிந்திய வேர்வை போலே
கோர்வையாய் கிடக்குதடி


மெளனத்தின் விலைவாசி
மயானத்தில் இல்லையடி
மந்திரித்த சேவல்களும்
பரபரப்பில் பதுங்குதடி


படிக்கும் கவிதையெல்லாம்
பனைமர கள்ளு போலே- நம்
பழைய நினைவுகளை
பளிச்சென்று தீண்டுதடி


கோபம் வந்ததென்று-வீண்
பாவம் செய்யாதே பெண்ணே
இக்கோப அலைகள் என்றும்
கோதையர்க்கு ஆகாதடி பெண்ணே


விசுவாச காதலுக்கு -எங்கும்
விளம்பரம் இல்லையடி
விலையற்ற என் அன்புக்கு
விதியே விடை சொல்லும்.

Monday, April 13, 2015

மன்மத புத்தாண்டு

ன்மத புத்தாண்டு
மகிழ்வுடனே மலர்ந்திட,

புன்னகை முகத்தோடு
புதுமைகள் செய்திட,

புதுமைப் பொலிவுடன்
புத்தெhளி வீசிட

இன்னல்கள் நீங்கி
இன்பங்கள் பொங்கிட,

தமிழர் எம் வாழ்வில்
தடைகள் எங்கும் நீங்கிட

புலரும் புதுவருடத்தை
புத்தாடை போர்த்தி
புகழ்பாடி வரவேற்போம்

* என் இனிய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும்*
*...மன்மத தமிழ் புதுவருட நல் வாழ்த்துகள்....*

சாதிக்கு சவுக்கடி

அரும்பு மலரும்
அதிகாலை வேளையிலே
ஈடற்ற ஓவியமாய்
கீழ்வானம் ஒளிர்ந்திடும் பொழுது


சாதி நிர்ணயிக்கும்
சாமானியர்களுக்கு சட்டென்று
சவுக்கடி கொடுத்து அடக்கும்
சரித்திர பார்வையில்-என்
இனத்தவனின் விவசாயம்


ஆட்டெரு மாட்டெரு என
அனைத்தும் அடியாய் இட்டு
இயந்திரம் கொண்டும் அடி
மாடு கொண்டும் அழகாய் உளுது


வெய்யிற் காலம் நோன்பிருந்து
வெருந்தரையில் சுருண்டு கிடந்ததும்
மணல் மண் பாத்தி கட்டி
மங்கையர் விரல் பிடித்து
மண்ணில் விதை ஊன்றி


ஓரிரு மாதம் போக
ஓங்கி வளர்ந்த தாளிலே
இலைபூச்சிகள் உயிர் வாழ
டெமட்டான்,பாஸ்போமிடான்
கொண்டு பாரிடை நோய்களை நீக்கி


மழை காற்று பாராமல்
பணிவிலும் இரவிலும்
படங்கில் கிடந்தது கொண்டு
பிடுங்கிய பயிரை வாங்கிய
சனல் கயிறு கொண்டு
சோடி முடிச்சு போட்டு
சோதனை வெள்ள கட்டும்
கட்டுகளையார் மறந்தீர்.


வீட்டுக்கு வந்தாச்சு பயிர்
விரல் சூப்பும் குழந்தை முதல்
கால் தடக்கும் கன்னியர் வரை
தகர கத்தி கொண்டு வெங்காயம்
தவழ்ந்து புரண்டு வெட்டிய கதை
வேதனையில் முடியுதின்று


வயித்துப் பொழப்புக்கு,
வெவசாயம்,வெங்காய
மூட்ட நாலஞ்சி,
ஊரெல்லாம் சுத்தி வரும்
மாடியில கோடியில,
இல்லாத சந்தோஷம்,
மாடு மேய்க்கும் வேலைல
வெங்காய விலையேற்றதில்
நிறைஞ்சிருக்கும்,,,!

Monday, April 6, 2015

அழைத்திடு அம்மா!

அயல் நாட்டில் நான் அம்மா
அடிவயிறு கனக்கிறது அம்மா
அந்து சந்து பொந்து எல்லாம்
அழகிய உன் நினைவுகளேயம்மா,


அலைப்பாய் அலைபேசியிலென்று
என் ஆழ்மனம் சொல்கிறதம்மா
அழைக்கவில்லை நெடுநாளாய் என்று
என் அலைபேசியும் அழுகுறதம்மா


அன்புக்கே ஏங்கினேன் அம்மா -என்னை
அடிமையாய் நினைக்காதேயம்மா
பத்துமாதம் பகலிரவாய் நான்
பசியிருந்து பெற்றமகன் என்று!
பட்டையம் போட்டு பத்திரம் கொடுத்தாயே!


இன்று பாசம் எனும் பசி வாட்ட
பரிதவிக்கிறேன் உன் பாவிமகன்
அடுக்கடுக்காய் மிஸ்ட் காலும்
அடிக்கடி கொடுத்தேனே,
அழைக்கவும் தோனல்லையோ!
அன்பு மகன் படும் அவதியில் உன்
அடிவயிறும் எரியல்லையோ?


வரி வரியாய் கவி வடித்தும் -என்
வலி தீர்க்க முடியல்லம்மா
வசதியாய் நாம் வாழ
வழி ஒன்று பிறக்குமம்மா
விதி ஒன்று உண்டெனில்-நான்
விண்ணையும் எட்டுவேன் அம்மா

விளம்பரம் வேண்டாம் அம்மா
வினை தீர்க்க வருவேன் அம்மா,


அன்பாய் மூன்று வார்த்தை
அழகாய் அழைத்துவிடு என்
அடிமன சோகம் எல்லாம்
அடியோடு போய் விடும்-அதிசயம் 

நிகழும் எனில் அதுஉன்
அழைப்பிலே ஆகட்டும் அம்மா!!!!!

Thursday, April 2, 2015

இம்சை

தினம் காலை விழிக்கையில்
காதோரம் ஒரு முத்தம்!
கணினி கைகொண்டு 'கார்'
எடுக்கச் செல்லுகையில்
கன்னத்தில் மறு முத்தம்!

கடமை முடிந்து களைப்படைந்து
வீடுவர வாவா உனக்காகத்தான்
காத்திருக்கிறேன் என்று
கண்களால் கனிமுத்தம்!
காதல் வயப்பட்டு காரிகையின்
கண்பார்க்க கார்மேகம்
பொழிவது போல் கட்டி முத்தம்
கணக்கின்றி!

வெறும் கனவுதான்...!-ஆனாலும்
இதமாக இருக்கிறது
எண்ணிப்பார்க்க!
என்னவளே எங்கே நீ,!??