Sunday, March 29, 2015

மோதலா காதலே!

காத்திருந்த காலமெல்லாம்
விழி பூத்திருந்ததடி
உன்னையெண்ணி,,!
நீலவானம் நிறம் மாறியது
நீ இல்லை என்பதனால்
காணவில்லை உன்னையென்று
கருமேகமும் கலைந்தது சென்றது,


வீசும் தென்றலும்,
கொட்டும் மழையும்,
சுட்டிடும் வெய்யிலும்
சாட்சி வைத்து
காதல் செய்தோமே,
கதிரவனை கண்ட
கருமுகில் போலே
கானலாய் நீயும்
மறைந்திடவே?
சாதியார் செய்ததடி-நம்
சரித்திர காதலுக்கு,


இவ் வாழ்வும் இல் வாழ்வும்
இனிதாய் இருக்குமென்று
இரவுபகல் கனா கண்டேன்
இரண்டும் இல்லையடா
இனியுன் வாழ்விலென்று
இனியவளே செல்வதேனோ?
இளையவளே சென்றதேனோ?

Sunday, March 22, 2015

நடுவோம் நல்ல மரம்

வீட்டுக்கொரு வீரன் சென்றான்
விடுதலை வென்று வர,-அவன்
வீரச்சாவில் விட்டுசென்றான்
அவனுருவில் ஆலமரம்,


உறவுகோர் உருவகமாய்-
நாளை நம் நினைவு கூற
நாமும் நடுவோம் நல்ல மரம்,


ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து
எரி குளம் அருகில் நட்டு
நாட்டு வலம் காத்திடவும்
நாளைய தலைமுறை சிலிர்த்திடவும்
நாமும் ஒரு மரம் நடுவோம்


ஆடு மாடு உணவுக்கே
அழகாய் ஒரு மரம் நடுவோம்
அன்பு கொண்ட உள்ளமெல்லாம்
ஆடி பாடி மகிழ்ந்திடவே
ஆளுக்கொரு மரம் நடுவோம்


வறண்டு போகும் வையகத்தின்
வளர்ச்சிக்கு மரம் நடுவோம்
இல்லம் தேடி வந்தோரெல்லாம்
இளைப்பாறி இன்புறவே
இன்றே ஓர் மரம் நடுவோம்


சாலையோர மரம் சமதூரம் நட்டு
பிச்சைக்கு தட்டேந்தி பிழைப்பு
நடத்துவோர்கெல்லாம்-பச்சை
மர நிழலின் பசுமை உணரசெய்ய
பார்த்து பார்த்து மரம் நடுவோம்


கள்ளக்காதல் நல்ல காதல்
காமக்காதல் கண்ணியகாதல்
கொண்டோரெல்லாம் கொண்டாடவே
கோடைநிழல் கொட்டித்தரவே
கோடி மரம் நாம் நடுவோம்,


சூரியகுதிரைகள் எங்கள் சூழலில்
நுழையா வண்ணம்-நம் சுழலும்
தலைமுறை சுற்றி நின்று நினவு கூற
சுருக்காய் செயல்படுவோம்

Friday, March 20, 2015

வய(து)லும்

கட்டு சோறு
கட்டி கொண்டு
முற்றிய கதிர்களை

முறித்து போட்டு

வாய்கால் வரம்பு வழி
வந்த பட்டாம் பூச்சி
விட்டு விரட்டி சேற்றில்
விழுந்து ஆற்றில்
குளிக்க சென்றதும்,,,,,,!


பட்ட வெயில்
தொட்டு செல்லும்
வயல்க்காற்றின்
வரப்பில் - மெல்ல
நடை போடும் நினைவும்
கனவில் காண்கையில்
மேனி சிலிர்க்குதே,!


வாய்கால் வழியே
வளிந்தோடும்
ஆண்டான் குளம்
அருஞ்சுவை நீரும்
அடுத்த பிறப்பொன்று
இருந்தால் அதிலும்
அங்கே நீராட சொல்லிய காலம்


பச்சை ஓலை பனைமரங்கள்
நுங்கு,பழம்,கிழங்குகளும்
தினம் தந்து கள்ளும்
சுவைத்திடவே சுற்றி
நின்று ரசித்தோமே


உழுத வயல்
உஷ்ண மணமும்
இழையவள்
நாற்றின் மணமும்
முற்றிய கதிரின்
வெட்டிய மணமும்
தூற்றிய நெல்லின்
தூசு மணமும் -சூடு
மிதிக்கும் இயந்திரமாய்-இன்னும்
சுற்றிக்கொண்டு இருக்குதே
இதயத்தினுள்ளே,,!


அறியாத வயதில்
அனுபவித்த மகிழ்ச்சியை
தொலைத்து விட்ட..
அறிவின் துக்கங்கள் என்னுளே..!


வயல் வரப்பில்
வாடினாலும்,வளமான
வாழ்க்கையில்லை
விளைச்சளுக்கேற்ற
விலையில்லை,
விலையேற்றம் விழவில்லை,


கால்வயிறு சோறுண்டு,
காணி நிலமில்லை,

கண்ணீரில் கரைகின்றான்
நிகழ்கால விவசாயி,
கவலை மறந்து குதிகின்றான்
எதிர்கால விவசாயி

Friday, March 13, 2015

இரும்பா! இவள் இதயம்.

இரக்கமற்ற மனிதருள் -என்னால்
இடத்திற்க்கேற்றால் போலே
இயங்க முடியவில்லையேன்?

இதயத்தில் வலியும் -என்
இமைகளில் துளியும்
இடைவெளி இன்றி சிந்தினேன்
இருந்தும் முடியவில்லை.

இரும்பு இல்லை இதயம் என்று
இறக்கமற்ற இவளுக்கு,
இறைவா ஏன் புரியவில்லை?

உன் படைப்பில் பிழையா?
என் பார்வையில் பிழையா?
படைத்த உன்னை குற்றம் சொல்லி
பலியை உன் மேல போட -நான்
படித்த பண்டிதன் இல்லை

உறவாய் அவள் இருந்து
உள்ளத்தை தான் பறித்து
உணர்வை சிதைத்து விட்டு
உண்மையை மறந்துபோக-என்
உயிரும் ஊசலாடுதின்று

தலையிடி காய்ச்சலும்
தாறுமாறாய் தாவியது,
தலை சாய்த்து நான் உறங்க
தாய் மடியிங்கில்லை,-ஆனால்
தள்ளி நின்று ரசிபதற்க்கு
தாராள உறவு பல,,!

பாசத்தை தேடி சென்று,
வேசத்தில் வெந்து போனேன்
வேண்டாம் இல் வாழ்வு
போதும் இவ் வாழ்வு
இல்லை ஏன் நின்மதி -ஆமாம்
வேண்டும் என் வெண்மதி...!

Thursday, March 12, 2015

பொல்லாத நினைவுகள்

ஆற்று நீரின் அறுசுவை
அறியாதோர் யார் உண்டு
என் தமிழ் மரபிலே,,,!


காடுமலை தாண்டி வந்து
கஞ்சிக்கு தண்ணி கொண்டு
கரைசேர்ந்த காலமது,,,,!


பள்ளிப் பருவத்திலே
காத்திருந்து வீற்றிருந்து
தண்ணீரை பருகையிலே
ஆஹா என்ன சுகம்
ஆற்று நீரிலுமே,,!


மரம் செடி கொடியெல்லாம்
மறவர் தம் புகழ் பாடி,
ஓடி செல்லும் நீரினிலே
ஒட்டி கொண்ட சங்கீதத்தை
ஏடு பாரா ஏழையும்
எடுத்தியம்பிய காலம் அது,,,!


குளத்து நீரினிலே குதித்து
கும்மாளம் போட்டதுவும்,
குறத்தியர் குளிக்கையிலே
கூடிக்கிண்டல் செய்ததுவும்,


அப்பாவின் சரம் எடுத்து
ஆத்து மீன் பிடிக்கையிலே,
மீனோடு சரம் நழுவி ஆறோடு
போகையிலே, ஆலம் விழுதெடுத்து
அப்பா அடிச்ச அடி -அச்சோ
அடையாளம் அழியாமல்
இருக்குதல்லோ..


பச்சை மரத்திலே- காலம்
பாய்ச்சிய ஆணியை போலே
பசுமையான நினைவுகள்
பதிந்ததே மனமதினில்.


காலம் கை நழுவி தழுவிப்
போனாலும் - நம்மை
ஆளும் நினைவு சில
உசுர உலுப்பி எடுக்குதையா
மீண்டும் வந்திடுமாய்யா-மண்ணுள்
மாண்டு போனா நம் இளமை..!

Wednesday, March 11, 2015

என்னவளே ஏற்றிடம்மா.

ஓரப் பார்வையால் என்னை
ஒளிப்பதிவு செய்தவளே,
ஐநா பாதுகாப்புச் சபையும்
ஆணையது பிறப்பிக்கும்
நின் பார்வையிலே உண்டு
பயங்கற வாதம் என்று,


நிலையற்ற வாழ்வில்
நிஜமாக தோன்றியவளே,
நீ தேடிய சொர்க்கம்
நான்தான் என்றவளே,
தோழமையும், தாய்மையும்
தாரை வார்த்தவளே,


அன்பையும், காதலையும்
பருக கொடுத்தவளே,

பெண்மை இதுதான் என்று
அறிய வைத்தவளே,-என்
ஆண்மையின் ஆணவம்
உணர வைத்தவளே,


உயிரை பிய்த்தெடுக்கும்
வலியும் இதுதான் என்று
உணர வைத்து-நீயும்
உயிரையும் பறிக்கலாமோ?


உன் சந்திர வதனத்தையும்
சங்கு கழுத்தினையும்
தொடுகின்ற ஆபரணத்தை
ஏக்கமாய் பார்த்தே -உன்
இடைதழுவும் நூலாக
இரவு பகல் தவமிருந்தேன்


விருப்பமெல்லாம் உன் மேலே
விரிமலரே என்னை நீயும்
துரும்பென்று எண்ணாமல்
தூயவனை ஏற்றிடுவாய்.


புண்னான என் நெஞ்சிற்கே
புதுமருந்தாய் வந்தவளே!
தூயவளே என்னையுமுன்
துணையாக ஏற்றிடம்மா!

Tuesday, March 3, 2015

உரைப்பாயா உறவே நீ,

அழகிய கன்னி ஒருத்தி!
இந்தநாள் நினைவினிலே
என் அடிமனக் கனவினிலே!
அடிக்கடி வந்து போனால்.


அவள் பெயர் சொல்கையிலே
மனதில் ஒரு புன்னகை - இன்று!
மயக்கும் அவள் விழிகளில்
மயங்கின என் மொழிகளும்!


மயக்கிய விழிகள் யார் என்று
நான் மதி மயங்கி நிற்கையில்
என் மனையாள வரும்
மாங்குயில் நீ தான் என்று
மறைமுகமாய் சொன்னாயடி,


நிலவோடு தனியாக-நானும்
நீ இன்றி இருக்கையிலே
நின் நினைவுகள் நித்தமும்
என்னோடு நிரந்தரமாய் நிற்குதடி.


கத்தும் கடலலையும்
கை கட்டி நின்றிடும் டி
கடல்கரை தனிலே நீயும்
கால் நனைக்க வந்திடவே,


சொட்டுத்தேன் வடியும் நின்
செக்க செவ்விதல் திறந்து
பட்டுப்போன என் மனதில்
பால் சுரக்கும் வண்ணம்


அறியா பாலகன் எனக்கு
நீ எட்டு உரைப்பாயோ அழகி
நம் காதல் கதையதன்
கருப்பொருள் என்னவென்று