Thursday, March 12, 2015

பொல்லாத நினைவுகள்

ஆற்று நீரின் அறுசுவை
அறியாதோர் யார் உண்டு
என் தமிழ் மரபிலே,,,!


காடுமலை தாண்டி வந்து
கஞ்சிக்கு தண்ணி கொண்டு
கரைசேர்ந்த காலமது,,,,!


பள்ளிப் பருவத்திலே
காத்திருந்து வீற்றிருந்து
தண்ணீரை பருகையிலே
ஆஹா என்ன சுகம்
ஆற்று நீரிலுமே,,!


மரம் செடி கொடியெல்லாம்
மறவர் தம் புகழ் பாடி,
ஓடி செல்லும் நீரினிலே
ஒட்டி கொண்ட சங்கீதத்தை
ஏடு பாரா ஏழையும்
எடுத்தியம்பிய காலம் அது,,,!


குளத்து நீரினிலே குதித்து
கும்மாளம் போட்டதுவும்,
குறத்தியர் குளிக்கையிலே
கூடிக்கிண்டல் செய்ததுவும்,


அப்பாவின் சரம் எடுத்து
ஆத்து மீன் பிடிக்கையிலே,
மீனோடு சரம் நழுவி ஆறோடு
போகையிலே, ஆலம் விழுதெடுத்து
அப்பா அடிச்ச அடி -அச்சோ
அடையாளம் அழியாமல்
இருக்குதல்லோ..


பச்சை மரத்திலே- காலம்
பாய்ச்சிய ஆணியை போலே
பசுமையான நினைவுகள்
பதிந்ததே மனமதினில்.


காலம் கை நழுவி தழுவிப்
போனாலும் - நம்மை
ஆளும் நினைவு சில
உசுர உலுப்பி எடுக்குதையா
மீண்டும் வந்திடுமாய்யா-மண்ணுள்
மாண்டு போனா நம் இளமை..!

0 comments:

Post a Comment